சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் தன் வாழ்நாளின் சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளார்.
5 டி20 போட்டிகள் கொண்ட நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ராகுல் 224 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார். அதுமட்டுமல்லாமல் இந்த டி20 தொடரில் சராசரியாக 50ரன்களுக்கு மேல் குவித்து, கீப்பிங் பணியையும் சிறப்பாக ராகுல் செய்தார்.
ராகுலின் சிறப்பான பங்களிப்பு மூலம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ராகுல் 823 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் உள்ளார். கே.எல்.ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கையில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அவர் இடம் பிடிக்கும் சிறந்த ரேங்கிங் இதுவாகும்.
இதுதவிர ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி, 662 புள்ளிகளுடன் டாப் 10 பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 673 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மற்ற இந்திய பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் அய்யர் 55-வது இடத்துக்கும், மணிஷ் பாண்டே 58-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். மற்ற வகையில் தரவரிசையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
3-ம் இடத்திலிருந்து 8-ம் இடம் வரை முறையே, ஆரோன் பிஞ்ச், காலின் மன்ரோ, டாவிட் மலான், மேக்ஸ்வெல், லூயிஸ், ஹஸ்ரத்துல்லா ஆகியோர் உள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாகிஸ்தானும், தொடர்ந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளன.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும், ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் முதல் 10 இடங்களுக்குள் எந்த இந்தியப் பந்துவீச்சாளர்களும் இடம் பெறவில்லை.