விளையாட்டு

இருமினாலோ தும்மினாலோ சமூக விரோதியைப் போல் பார்க்கிறார்கள்: கரோனா வைரஸ் குறித்து அஸ்வின் கருத்து

செய்திப்பிரிவு

இருமினாலோ தும்மினாலோ விமானத்தில் உள்ளவர்கள் சமூக விரோதிகளைப் போல் பார்ப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல் சீனாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் இருந்து கேரள மாநிலம் வந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த வைரஸ் காற்றில் கலந்து அதிகமாகப் பரவுவதால், தங்களைப் பாதுகாக்க பலரும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிகெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று (02.02.2020) வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ''காலம் மிகவும் மாறிவிட்டது. நாம் இருமினாலோ தும்மினாலோ விமானத்தில் உள்ளவர்கள் அனைவரும் நம்மை ஒரு சமூக விரோதியைப் போல் பார்க்கிறார்கள்'' என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் முகக்கவசம் அணிந்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்.

SCROLL FOR NEXT