வீரேந்திர சேவாக், தோனி : கோப்புப்படம் 
விளையாட்டு

'தோனி எங்களை நடத்தியதுபோல் ரிஷப் பந்த்தையும் நடத்தாதீர்கள்': மனம் திறந்த வீரேந்திர சேவாக்

பிடிஐ

தோனி கேப்டனாக இருந்தபோது எங்களை நடத்திய விதம் போல் இளம் வீரர் ரிஷப் பந்த்தை நடத்தாதீர்கள். அவரிடம் பேசி அவருக்கு வாய்ப்பளியுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பணிக்கு தோனிக்கு அடுத்து ரிஷப் பந்த்தை தயார் செய்யும் முனைப்பில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தொடர்ந்து ரிஷப் பந்த்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஒருசில போட்டிகளில் மட்டும் ரன்கள் ஸ்கோர் செய்த ரிஷப் பந்த் பெரும்பாலான போட்டிகளில் ரன் அடிக்காமல் விரைவாக ஆட்டமிழந்து சொதப்பினார். மேலும், விக்கெட் கீப்பிங் பணியிலும் தோனி அளவுக்கு இல்லாமல் அதிலும் சுமாராகவே கீப்பிங் செய்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் ஏற்படவே, அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்யத் தொடங்கினார். ராகுல் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ராகுலே கீப்பிங் பணியைத் தொடர்ந்தார். ரிஷப் பந்த் பெஞ்ச்சிலேயே அமர வைக்கப்பட்டார்.

ரிஷாப் பந்த்

ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு வழங்காமல் அவரை ஓரம் கட்டி வைத்திருப்பது குறித்து முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேவாக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ரிஷப் பந்த்துக்கு ஏன் கடந்த சில போட்டிகளாக ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்தால் அவரால் எவ்வாறு ரன்களைக் குவிக்க முடியும். பெஞ்ச்சில் உட்காரவைத்தால் சச்சின் டெண்டுல்கரால்கூட ரன்கள் அடிக்க முடியாது. ரிஷப் ப்ந்த் மேட்ச் வின்னர் என்று நீங்கள் நினைத்தால், அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை, விளையாட அனுமதிக்கவில்லை. ஏனென்றால், அவர் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை என்ற காரணத்தைக் கூறுகிறீர்கள்.

நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தோனி கேப்டனாக இருந்தபோது இவ்வாறுதான் செயல்படுவார். கேப்டனாக இருப்பவர் வீரர்களுடன் சென்று கலந்து பேச வேண்டும். இப்போது இருக்கும் கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் கலந்து பேசுகிறாரா என்று எனக்குத் தெரியாது. நான் அணியில் இல்லாததால் என்னால் பதில் அளிக்க முடியாது.

ஆனால், ஆசியக் கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தபோது அவர் அனைத்து வீரர்களிடம் கலகலப்பாகப் பேசினார் என்று பலரும் தெரிவித்தனர்.

கேப்டனாக இருப்பவர் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடம் சகஜமாகப் பேசி, அனைவரிடமும் கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று சொல்லப்பட்ட தோனி பலமுறை வீரர்களுடன் கலந்து பேசாமல் இருந்துள்ளார்.

நாங்கள் ஆஸ்திரேலியப் பயணத்தில் இருந்தபோது என்னிடமும், சச்சின், கம்பீர் ஆகிய மூன்று தொடக்க ஆட்டக்காரர்களிடம் கலந்து பேசாமலே நாங்கள் மெதுவாக ஃபீல்டிங் செய்கிறோம் என்று ஊடகங்களிடம் தோனி தெரிவித்தார். ஆனால், அதற்கு முன் அணியின் கூட்டத்தில் எங்களிடம் பேசாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தோனி எங்களைப் பற்றிக் குறை கூறினார்.

ஆதலால், முதலில் அணியில் கூட்டத்தில் அனைத்து வீரர்களிடம் கேப்டனாக இருப்பவர் கலந்து பேச வேண்டும். ரோஹித் சர்மா புதியவர் , அவரை தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்க வேண்டும். அதற்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்க வேண்டும் அப்போது நடந்த கூட்டத்தில் நாங்கள் அமர்ந்து பேசினோம். எங்களை தோனி நடத்தியபோது போல் ரிஷப் பந்த்தையும் நடத்தாதீர்கள். அது தவறாகும்''.

இவ்வாறு வீரேந்திர சேவாக் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT