மவுன்ட் மவுங்கனியில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
நியூஸிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை 4 போட்டிகளில் 4-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மவுன்ட் மவுங்கனி மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், அப்பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்றுள்ளார். 4-வது போட்டியில் களமிறங்கிய அதே அணிதான் இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது. இந்த ஆட்டத்திலும் குல்தீப், ரிஷப் பந்த் இல்லை. தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்ஸனும், ராகுலும் களமிறங்குகின்றனர்.
நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை வில்லியம்ஸனுக்கு உடல்நிலை குணமடையதாததால் அவர் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை சவுதி ஏற்றுள்ளார். நியூஸிலாந்து அணியிலும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 4-வது போட்டியில் களமிறங்கிய அதே அணி இந்தப் போட்டியிலும் விளையாடுகிறது.
ஆடுகளம் எப்படி?
மவுன்ட் மவுங்கனி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் ஆடுகளமாகும். பந்துகள் நேராக, பவுன்ஸ் ஆகி பேட்ஸ்மேனை நோக்கி வரும் என்பதால் அடித்து ஆடலாம். வேகப்பந்து வீச்சாளர்களைக் காட்டிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும். இங்கு சராசரியாக முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்கள் வரை அடிக்க முடியும். டாஸ் வென்றால் பேட்டிங் செய்வது நல்ல முடிவு. இரவு நேரப் பணி இருதரப்பினரையும் பாதிக்கும். ஆடுகளத்தில் பந்துகள் நின்று வருவதால் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும்.