யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பவுலர் பாகிஸ்தான் பேட்ஸ்மென் ஒருவரை மன்கட் அவுட் செய்தது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெனோனியில் 31ம் தேதி நடைபெற்ற யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் இலக்கை விரட்டிய போது பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஹுரைரா ரன்னர் முனையில் கொஞ்சம் கூடுதலாக கிரீசை விட்டு நகர்ந்தார் என்பதற்காக ஆப்கானிஸ்தான் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமெட் அவரை மன்கடிங் முறையில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். விதிப்படி இது சரிதான்.
ஆனால் தார்மீகப்படி இது தவறு என்று முன்னாள், இந்நாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் தங்கள் பார்வையில் வேறுபட்டுள்ளனர். தொடக்க வீரர் ஹுரைரா பாவம் தன் அறிமுகப் போட்டியில் நேற்று ஆடி 76 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்தார். அப்போதுதான் நூர் அகமெட் இந்த ரன் அவுட்டைச் செய்தார். இவர் ஆட்டமிழந்தவுடன் 190 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து பாகிஸ்தான் 127/4 என்று இருந்தது.
வெற்றிக்கு அருகில் தான் பாகிஸ்தான் இருந்தது 134 பந்துகளில் 64 ரன்கள் தேவை என்ற மிகச் சவுகரியமான நிலையிலேயே இருந்தது. முன்னதாக ஆப்கானிஸ்தான் 189 ரன்களுக்கு மடிந்தது, பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
இந்நிலையில் மன்கட் ரன் அவுட் குறித்து ஆப்கான் கேப்டன் பர்ஹான் ஸகீல் கூறும்போது, “அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சித்தோம். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் இப்படி அவுட் செய்வது ஸ்பிரிட் ஆஃப் த கேமில் இல்லை.
நாங்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும், வேறு வழியில்லை. அவுட் என்றால் அவுட் தான், விதியின் படி அவுட்.கிரீசுக்குள் இருக்க வேண்டும், பிட்சின் அளவை 18 அடியாக ரன்னர் குறைக்க நினைத்தால் அவர் எங்களுக்கு பிரச்சினையை அளிக்கிறார் என்றே அர்த்தம்” என்று நியாயப்படுத்தியுள்ளார்.
அவுட் ஆன ஹுரைரா கூறும்போது, “நான் கிரீஸை விட்டு நகர்நதிருக்க கூடாது, என்முதல் சர்வதேச போட்டி, ஒரு கசப்பான அனுபவம். தவற்றை திருத்திக் கொள்வேன்” என்றார்.
ஹர்ஷா போக்ளே மன்கட் அவுட்டுக்கு சாதகமாகப் பேசியுள்ளார், கிரீசை விட்டு ரன்னர் நகர்ந்து வருவது ஸ்பிரிட் ஆஃப் த கேமுக்கு எதிரானது, என்றார்.