விளையாட்டு

தசைப் பிடிப்பினால் நடக்க முடியாத மே.இ.தீவுகள் வீரரை தூக்கிச் சென்ற நியூஸி. வீரர்களின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்

செய்திப்பிரிவு

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களாயினும் ஜூனியர் வீரர்களாயினும் எக்காலத்திலும் மனிதாபிமானத்துடனும், ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டுடனும் செயல்பட்டு வருவது பலரும் அறிந்ததே.

ஆனால் நேற்று ஐசிசி யு-19 உலகக்கோப்பையில் மேற்கிந்திய வீரர் ஒருவருக்கு கடும் சதைப்பிடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்ட போது நியூஸிலாந்து வீரர்கள் இருவர் அவரை அலாக்காகத் தூக்கிக் கொண்டு பெவிலியனில் விட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை நியூஸிலாந்து அணி நேற்று காலிறுதியில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மெக்கன்சி அதிகபட்சமாக 99 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து யு-19 அணி 153/8 என்று தோல்வி முகம் கண்டது. ஆனால் கடைசி 2 விக்கெட்டுகளை மே.இ.தீவுகளால் எடுக்க முடியவில்லை, பீல்ட் என்பவர் 38 ரன்களையும் கே.சி.கிளார்க் என்பவர் 46 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று ஹீரோக்களாயினர்.

இவர்கள் களத்தில் தங்கள் பேட்டிங்கில் ஹீரோக்களாயினர் என்றால் மனிதாபிமானத்தில், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பில் ஜெஸி டேஷ்காஃப் என்பவரும், ஜோசப் பீல்டும் கடும் சதைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் சிரமப்பட்ட மே.இ.தீவுகள் வீரரான மெக்கன்சியை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பெவிலியன் வரை விட்டது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சதம் அடிக்க ஒரு ரன் இருக்கும் போது மெக்கன்சி காயமடைந்து வெளியேறினார், பிறகு 9வது விக்கெட் விழுந்தவுடன் மெக்கன்சி இறங்கினார், ஆனால் முதல் பந்திலேயே பவுல்டு ஆகி துரதிர்ஷ்டவசமாக சதத்தை இழந்தார். இவர் ஆட்டமிழந்து செல்லும் போதுதான் நடப்பதற்கு சிரமப்பட நியூஸிலாந்து வீரர்கள் இவரைத் தூக்கிச் சென்று மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர்.

இவர்களின் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் பெரிய அளவில் பாராட்டுக்களை நெட்டிசன்கள் மத்தியில் குவித்து வருகிறது.

SCROLL FOR NEXT