விளையாட்டு

39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது: தெ.ஆ.வை நொறுக்கிய மார்க் உட்- 3-1 என தொடரைக் கைப்பற்றி இங்கிலாந்து அசத்தல்

செய்திப்பிரிவு

வெற்றி பெற 466 ரன்கள் என்று இங்கிலாந்து நிர்ணயித்த இமாலய இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி தன் கடைசி 6 விக்கெட்டுகளை 39 ரன்களுக்கு இழந்து 77.1 ஓவர்களில் 274 ரன்களுக்குச் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஜொஹான்னஸ்பர்கில் 4ம் நாளான திங்களன்று ஆட்டம் முடிந்தது, மார்க் உட் அசுர வேகத்தில் வீசி இந்த டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றியது.

இங்கிலாந்து தன் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 400 மற்றும் 248 ரன்கள் எடுக்க முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்சில் மார்க் உட்டின் அசுர வேகத்திற்கு 183 ரன்களில் சுருண்டு 2வது இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இன்று 35 ரன்கள் எடுத்த தெ.ஆ. கேப்டன் டுபிளெசிஸ், இந்தத் தொடரில் ஒருமுறை கூட 40 ரன்களை எட்டவில்லை என்பது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் கரும்புள்ளியாக முடிந்தது.

இங்கிலாந்து 3ம் நாளான நேற்று 248 ரன்களுக்குச் சுருண்டது. கடினமான பிட்சில் இன்று 466 ரன்கள் இலக்கை விரட்டும் முனைப்புடன் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி உறுதியுடன் ஆடியது, வான் டெர் டியூஸன் மிகப்பிரமாதமாக ஆடி 138 பந்துகளில் 15 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து 4வது விக்கெட்டாக விழுந்தவுடனேயே தென் ஆப்பிரிக்க அணியில் நிற்பதற்கு பெரிய பேட்ஸ்மென்கள் இல்லாமல் 235/4 என்ற நிலையிலிருந்து 274 ரன்களுக்குச் சுருண்டது. வான் டெர் டியூசன் உண்மையில் தன் முதல் டெஸ்ட் சதத்திற்கு தகுதியானவர்தான் பந்துகள் மேலும் கீழும் வரும் கடினமான பிட்சில் மார்க் உட், பிராட், வோக்ஸ், சாம் கரண் உள்ளிட்டோரை ஆடுவது சாதாரணம் கிடையாது.

தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஃபா டு பிளெசிஸ் (35), பென் ஸ்டோக்சிடமும், வான் டெர் டியூசன் (98), மார்க் உட்டிடமும் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்காவின் பின் வரிசை பொலபொலவென உதிர்ந்தது. இரு அணிகளும் அடுத்து பிப்ரவை 4ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றன.

இன்று கடும் வெயிலில் இங்கிலாந்து பவுலர்களுக்கு கடினமான தினம் என்றே பலரும் நினைத்தனர், அதற்கேற்றார் போல் டீன் எல்கர் (24), மலான் (22) ஆகியோர் 15 ஓவர்கள் நின்று 39 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் குளிர்பான இடைவேளை முடிந்து மறுபடியும் ஆட்டம் தொடங்கியவுடன் மலான், கிறிஸ் வோக்ஸ் பந்தை 2வது ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்து வெளியேறினார். இது வைடாகச் சென்ற பந்து. இதே ஓவரில் வான் டெர் டியூசனுக்கு நடுவர் எல்.பி. என்று தீர்ப்பளிக்க ரிவியூவில் பிழைத்தார் அவர்.

டீன் எல்கரும் டியூசனும் இணைந்து 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆனால் உணவு இடைவேளைக்கு சற்று முன் பென் ஸ்டோக்ஸ் பவுன்சரில் எல்கர் 24 ரன்களுக்கு வெளியேறினார். தேநீர் இடைவேளை வரையிலான ஆட்டத்தில் டுபிளெசிஸ், வான் டெர் டியூசன் அரைசதக் கூட்டணி அமைத்தனர். அப்போதுதான் பாவம் ஒரு பந்து உண்மையில் உருண்டது என்றே கூற வேண்டும், மட்டைக்கு அடியில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார் டுபிளெசிஸ், பந்தை வீசியவர் பென் ஸ்டோக்ஸ்.

98 ரன்களில் பிரமாதமாக ஆடி வந்த வான் டெர் டியூசன் கவர் திசையில் ஒரு பவுண்டரி விளாசி தன் சதத்தை நிறைவு செய்யலாம் என்று மார்க் உட் பந்தை அடிக்க அது நேராக கவர் திசையில் கேட்ச் ஆனது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு குவிண்டன் டி காக் (39), தெம்பா பவுமா, பவுண்டரிகளாக விளாசித்தள்ளினர். டி காக் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 42 பந்துகளில் 39 ரன்களையும் பவுமா 29 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் சடுதியில் 12 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று இங்கிலாந்து பவுலிங்கை சிறிது நேரம் பிய்த்துப் போட்டனர், கடைசியில் மார்க் உட் பந்தை எங்கோ அடிக்க நினைத்துக் கொடியேற்றினார் டி காக். பவுமா உயரம் குறைந்தவர் என்பதால் ஒரு சரியான லெக் கட்டர் பவுன்சரை பிராட் வீச பந்து தானாக கிளவ்வில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது.

பிறகு பிராட், இன்னொரு ஷார்ட் பிட்ச் பந்தில் டிவைன் பிரிடோரியஸையும் வீழ்த்தினார். வெர்னன் பிலாண்டர் தன் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸை ஆடினார், 10 ரன்களில் மார்க் உட்டின் சாதாரணமான பந்து ஒன்றை லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிலாண்டர் ரிட்டைய்ர்டு. இதன் பிறகு விரைவு கதியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது, மார்க் உட் 9 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் 100 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகன் மார்க் உட், தொடர் நாயகன் பென் ஸ்டோக்ஸ்.

SCROLL FOR NEXT