வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் 
விளையாட்டு

ஆஸி. ஓபன்: நடப்பு சாம்பியன் ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த 15 வயது வீராங்கனை

பிடிஐ

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் நடப்பு சாம்பியனும் ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா 15 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

ஏற்கனவே மகளிர் ஒற்றையர் 3வது சுற்றில் சீன வீராங்கனை கியாங் வாங் என்பவரிடம் செரீனா 6-4, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் இன்று நடப்பு சாம்பியனின் கனவும் தகர்ந்தது.

மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதலாவதான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. நடப்பு சாம்பியன் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்த்து மோதினார் தரநிலையில் இடம் பெறாத 15வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்.

ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் முதல்முறையாக கோகோ காஃப் களமிறங்கினார். ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் வரை பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒசாகாவை 6-3 , 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் கோகோ.

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஒருவர் 3-வ சுற்றிலேயே 15வயது வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

தோல்வியின் அதிர்ச்சியில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா

முதல் 5 கேம்களை 15 நிமிடங்களில் கைப்பற்றிய கோகோ முதல் செட்டை 32 நிமிடங்களில் தனகாக்கினார். 2-வது செட்டிலும் கோகோவின் ஆதிக்கமே இருந்தது. இருப்பினும் ஒசகா தனது அனுபவத்தால், மீண்டுவந்து 5-4 என்ற கணக்கில் நெருக்கடி அளித்தார். ஆனால், சர்வீஸ்களிலும், பந்தை திருப்பி அனுப்புவதிலும் அடுத்தடுத்து தவறுகளை ஒசாகா செய்ததால், 6-4 என்ற கணக்கில் இழந்தார்.

அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சகநாட்டு வீராங்கனையும், முன்னாள் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸை முதல் சுற்றிலேயே தோற்கடித்து அனுப்பினார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதற்கு முன் கடந்த 5 மாதங்களுக்கு முன் ஒசாகாவுடன் நியூயார்க் டென்னிஸில் கோகோ மோதினார்.அந்த போட்டியில் கோகோவை 6-3, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார் ஒசாகா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT