விளையாட்டு

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து

ஏஎஃப்பி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-17, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனும், முன்னாள் முதல் நிலை வீராங்கனையுமான சீனாவின் லீ ஸியூரூயை வீழ்த்தினார். இதன்மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார் சிந்து.

சிந்து தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார். அதில் வெற்றிபெறும்பட்சத்தில் சிந்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துவிடுவார். ஏற்கெனவே 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.

மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால் 21-18, 21-14 என்ற நேர் செட்களில் ஜப்பானின் சயாக்காவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இதுவரை சயாக்காவுடன் 4 முறை மோதியுள்ள சாய்னா, அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார்.

சாய்னா தனது காலிறுதியில் சீனாவின் வாங் இகனை சந்திக்கிறார். இதற்கு முன்னர் 5 முறை உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியுள்ள சாய்னா, ஒருமுறைகூட காலிறுதியைத் தாண்டியதில்லை. அதனால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சாய்னா தனது காலிறுதியில் வெற்றி பெறும்பட்சத்தில் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துவிடுவார்.

ஜுவாலா ஜோடி வெற்றி

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 21-15, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரெய்க்கா-மியூக்கி ஜோடி யைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT