விளையாட்டு

பழி வாங்குவதா? நியூஸிலாந்தையா? அந்த அணி வீரர்கள் அருமையானவர்கள்: விராட் கோலி 

செய்திப்பிரிவு

உலகக்கோப்பை 2019-ல் அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக 239 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்ட முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

இதற்கு இந்தத் தொடரில் பழிதீர்க்கப்படுமா என்ற கேள்வியை இன்று நியூஸிலாந்தில் நிருபர்கள் எழுப்ப விராட் கோலி கூறியதாவது:

நிச்சயமாக இல்லை, பழிவாங்கும் எண்ணமே கூட சாத்தியமல்ல, நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள், அதெல்லாம் பேசக்கூடாது. இவர்களுடன் நாங்கள் நன்றாகப் பழகி வருகிறோம்.

களத்தில் சவாலாகத் திகழ்வது வேறு விஷயம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னுதாரணமாகத் திகழ்வதில் நியூஸிலாந்து நம்பர் 1 அணியாகும். அவர்கள் உடல் மொழியில் தீவிரம் இருக்கும், சிறப்பாக ஆட எப்போதுமே முயற்சிப்பார்கள்.

ஆனால் அதற்காக அவர்கள் அசிங்கமாக நடந்து கொள்ள மாட்டார்கள், ஏற்றுக் கொள்ள முடியாத செயல்களில் களத்தில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் விளையாடும் விதமே இதனை எடுத்துரைக்கும் இந்த விதத்தில் நியூஸிலாந்து அணி மதிக்கத்தக்க அணியாகும்.

தரமான அணி, அவர்கள் மீது எங்களுக்கு ஏகப்பட்ட மரியாதை உள்ளது. அவர்களும் எங்கள் மீது அதிக மரியாதை உள்ளவர்கள். உலகக்கோப்பையில் நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போது உண்மையில் நாங்கள் மகிழ்ச்சியே அடைந்தோம். ஒரு அணியாக அவர்களுக்கு அது மிகப்பெரிய விஷயம்.

நியூஸி. ரசிகர்களுக்கு கிரிக்கெட் என்பது வாழ்க்கையை விட பெரிதல்ல, நியூஸி. கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும் இந்த மன உணர்வு, விளையாட்டை விளையாட்டாகத்தான் அவர்கள் பார்ப்பார்கள்.

ஆனாலும் கடினமாக ஆடுவார்கள், வெற்றி பெறவே விரும்புவார்கள், தோல்வியடைந்தால் மிகவும் வருந்துவார்கள். மிகவும் ரிலாக்ஸானவர்கள், எது செய்தாலும் அதை தொழில்நேர்த்தியுடன் செய்வார்கள், அதுதான் நியூஸிலாந்தில் வந்து ஆடும் அணிகளுக்கு மகிழ்ச்சியான விஷயம், என்றார் விராட் கோலி.

SCROLL FOR NEXT