தோனி, கோலி : கோப்புப்படம் 
விளையாட்டு

தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி: வில்லியம்ஸனும் கடும் போட்டி

செய்திப்பிரிவு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நீண்ட கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி விளையாடுகிறது.

முதல் டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனியின் முக்கியமான சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டிக்கு கேப்டனாக இருந்து தோனி இதுவரை 62 இன்னிங்ஸ்களில் 1,112 ரன்கள் குவித்துள்ளார். அதேசமயம், விராட் கோலி, கேப்டனாக இருந்து 33 போட்டிகளில் 1,032 ரன்கள் குவித்துள்ளார், இதில் 143 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

இந்நிலையில் தோனியின் சாதனையான 1112 ரன்களை முறியடிப்பதற்குக் கோலிக்கு இன்னும் 81 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. விராட் கோலி நிச்சயம் அடுத்து வரும் டி20 தொடரில் தோனியின் சாதனையை முறியடிப்பார் என நம்பலாம்.

டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் 40 இன்னிங்ஸில் 1,273 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

2-வது இடத்தில் 62 இன்னிங்ஸில் 1,112 ரன்கள் சேர்த்து தோனி உள்ளார். தோனியின் சாதனையை கோலி முறியடித்தால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். 3-வது இடத்தில் நியூஸிலாந்து கேப்டன் கானே வில்லியம்ஸன் 39 இன்னிங்ஸில் 1083 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த கேப்டன் கோலிக்கும், நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனுக்கும் இடையே அதிகமான ரன் சேர்க்கும் கேப்டன் என்ற போட்டி தீவிரமாக இருக்கும்.

கோலிக்கும், வில்லியம்ஸனுக்கும் இடையே 49 ரன்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும் நிலையில், இந்த தொடரில் இரு வீரர்களுக்கும் இடையே ரன் சேர்ப்பதில் கடும் போட்டி இருக்கும்.

SCROLL FOR NEXT