பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த கடைசி ஒருநாள் போட்டிக்கும் நியூஸிலாந்தில் நாளை முதல் டி20 போட்டியில் ஆடுவதற்கும் இடையே 5 நாட்கள் மட்டுமே இடைவெளி.
இதில் இந்திய அணிக்குக் கிடைக்கும் முழு இடைவேளை என்று பார்த்தால் 3 நாட்கள்தான்.. அதற்குள் இன்னொரு தொடர், இன்னொரு சூழல், இன்னொரு சவால், உண்மையில் பெரிய அளவில் மனத்திடம் வேண்டும் என்பதை கோலி மிகச்சாதாரணமாகக் கூறுகிறார்.
“நேரடியாக மைதானத்தில் லேண்ட் ஆகி உடனடியாக போட்டியில் களமிறங்க வேண்டிய தருணங்களை வீரர்கள் நெருங்கி வருகின்றனர். இத்தகைய பயணம் மற்றும் இந்திய நேரத்துக்கும் இங்குள்ள நேரத்துக்கும் ஏழரை மணி நேரம் வித்தியாசம், உடனடியாக அட்ஜெஸ்ட் செய்வது கடினம்தான். எதிர்காலத்தில் வீரர்களின் இத்தகைய கடினப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டாக வேண்டும்.
இப்படித்தான் இது போகும், அந்த நேரத்திற்கும் இங்குள்ள நேரத்துக்குமான வித்தியாசங்களைக் கருத்தில் கொண்டு விரைவில் களமிறங்கி ஆட பழகித்தான் ஆக வேண்டும். இன்று சர்வதேச கிரிக்கெட்டின் நிலை இதுதான், ஆம், அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டுகள்!
ஆனால் முதலில் டி20 என்பது ஆறுதல், ஏனெனில் களத்தில் கொஞ்ச நேரம்தான் விளையாடப் போகிறோம். அந்த வகையில் ஆஸி.க்கு எதிராக 50 ஓவர் என்ற நீண்ட வடிவத்தில் ஆடினோம் அதற்கு முன்னதாக பல டி20 போட்டிகள். கடந்த ஒருநாள் போட்டியில் டி20 கிரிக்கெட்டையும் விட அதிகமாக ஆடியிருப்பதால் டி20 தொடருக்கென தனியாக தயாரிப்புத் தேவைபடவில்லை. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆண்டு, எனவே ஒவ்வொரு போட்டியுமே முக்கியம்தான்” என்றார் விராட் கோலி.