நூறாண்டுகளுக்கு மேற்பட்ட கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் எல்லைகள் எல்லா விதங்களிலும் விரிவடைந்திருக்கின்றன. அதற்கு முன்பு நிகழ்த்தப்பட்ட பல சாதனைகள் முறியடிக்கப்பட் டிருக்கின்றன. வெறும் 52 டெஸ்ட் கள் மட்டுமே ஆடி, 6996 ரன்கள், 29 சதங்கள், 99.94 சராசரி என்னும் மகத்தான சாதனை படைத்த சர் டான் பிராட்மேனைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கடந்த 25 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் முக்கியமான நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன.
பல்வேறு திறமைசாலிகள் ஆட்டத்தின் போக்கையும் வீச்சையும் மாற்றிவருகிறார்கள். எண்பதுகளில் கவாஸ்கரும் கபில்தேவும் முறையே மட்டையிலும் பந்திலும் உலக சாதனைகளை முறியடித்தார்கள். பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனைகள் அவை. ஆனால் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் அடுத்த பத்தாண்டுகளிலேயே பிறரால் முறியடிக்கப்பட்டுவிட்டன. அடுத்த சில ஆண்டுகளில் அந்தச் சாதனைகள் மேலும் விரிவடைந்து கவாஸ்கர், கபில்தேவ் ஆகிய பெயர்கள் பட்டியலில் மிகவும் பின்னுக்குப் போய்விட்டன. இந்தப் புத்தாயிரத்தில் அத்தகைய சாதனைகள் மேலும் வீரியத்துடனும் வேகமாகவும் முறியடிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சாதனை மன்னர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று இலங்கை மட்டையாளர் குமார் சங்ககாராவைச் சொல்லலாம்.
சிறப்பான ஆட்டத்திறன்
புத்தாயிரத்தில் களத்தில் பிரவேசித்த மற்ற ஆட்டக்காரர்களைவிட எல்லா விதங்களிலும் முன்னணியில் நிற்கும் இந்த வீரர் ஓய்வுபெற்றுவிட்டார். “இவர் ஏன் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறார்” என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஆடிக்கொண்டிருந்த பலரைப் போல அல்லாமல் “இவர் ஏன் இப்போது ஓய்வுபெறுகிறார்” என்று கேள்விகள் எழும் நிலையில் கம்பீரமாக ஓய்வுபெற்றிருக்கிறார். அவரது அணியும் அவரது நாட்டின் கிரிக்கெட் நிர்வாக அமைப்பும் அவரைப் போக வேண்டாம் என்கிறார்கள்.
அவரது கடைசி இரண்டு டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய நன்கு இன்னிங்ஸ்களிலும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை என்றாலும் அதை வைத்து அவரது ஆட்டத்திறனைக் கணிக்க முடியாது. 37 வயதிலும் அவர் உடல் திறன் செம்மையாகவே இருக்கிறது. இந்த ஆண்டின் உலகக் கோப்பைப் போட்டிகளில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடிக்கும் அளவுக்கு ஆட்டத்திறனும் உடல் திறனும் சிறப்பாகவே இருந்தன. நியூஸிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடிக்குமளவுக்கு ஆட்டம் ஸ்திரமாகவே இருந்தது. இந்தியத் தொடருக்கு முன்னால் நடந்த பாகிஸ்தான் தொடரில்தான் அவரது ரன் குவிப்பு குறைந்திருந்தது.
மங்காத ஆட்டம்
எது சங்ககாராவை அவரது சமகாலத் தவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டு கிறது? எது அவரை வரலாற்றின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக முன்னிறுத்து கிறது? புள்ளிவிவரங்களே பேசுகின்றன.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மிகச் சில மட்டையாளர்களில் ஒருவர் இவர். 8000, 9000, 10000, 11000, 12000 ஆகிய மைல் கல்களைப் பிறரைவிட விரைவாகக் கடந்தார். 10000 ரன்கள் விஷயத்தில் மட்டும் பாண்டிங்கும் சச்சினும் இவருக்கு இணையான வேகத்தில் கடந்திருக்கிறார்கள்.ஏழு முறை ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் சங்ககாரா சேர்க்கப்பட்டார். 2012-ல் ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் விருதையும் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும் பெற்றார். அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோதும் அவரது ஆட்டத் திறன் மங்கவில்லை.
11 இரட்டை சதங்கள்
அடிக்க ஆரம்பித்தால் நிறுத்தும் பழக்கமே இல்லாதவர் என்று இவரைச் சொல்லலாம். அதற்கு உதாரணம் அவர் அடித்த 11 இரட்டைச் சதங்கள். சதம் அடித்ததும் நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசுவாசம் கொள்ளும் மட்டையாளர்களுக்கு மத்தியில் அசராமல் தொடர்ந்து தீவிரம் காட்டும் பழக்கம் கொண்டவர் இவர். இவரது சமகாலத்து மட்டையாளர்களில் யாரும் இத்தனை இரட்டைச் சதம் அடித்ததில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்தச் சாதனையின் மகிமை புரியும். பிரையன் லாரா (9), மஹேல ஜெயவர்த்தனா (7), ஜாவேத் மியான்தத், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், மர்வன் அட்டப்பட்டு, வீரேந்திர சேவாக் ஆகியோர் தலா 6 இரட்டைச் சதங்கள் அடித்திருக்கிறார்கள். டான் பிராட்மேன் மட்டுமே இவரைவிட அதிக இரட்டைச் சதங்களை (12) அடித்திருக்கிறார்.
பெரும் சாதனையாளர்களோடு ஒப்பிடப்படும்போதுதான் சங்ககாராவின் மட்டை வீச்சின் வலிமை புரியும். 12,000 ரன்களை இவர் 224 இன்னிங்ஸ்களில் கடந்தார். டெண்டுல்கர், பாண்டிங் ஆகிய இருவருக்கும் 12,000 ரன்களைக் கடக்க 247 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன.
முகம் சுளிக்காத சங்ககாரா
ஆட்டத்தில் அபாரமான திறமையும் சற்றும் விட்டுக்கொடுக்காத போர்க்குணமும் கொண்டிருந்த சங்ககாரா, கிரிக்கெட் கனவான்களின் ஆட்டம் என்பதற்கு இலக்கணமான நடத்தையும் கொண்டிருந்தார். 192 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலியாவில் தவறான தீர்ப்பினால் ஆட்டமிழந்தார். ஆனால் சற்றும் முகம் சுளிக்காமல் நடையைக் கட்டினார். போட்டி முடிந்த பிறகும் அது பற்றிப் பேசவில்லை. தவறை உணர்ந்து நடுவர் ரூடி கோர்ட்சன் வருத்தம் தெரிவித்தபோது, அவர் முதுகில் தட்டி, “இதெல்லாம் சகஜம்” என்று அவரைத் தேற்றியவர் சங்ககாரா.
2011-ல் எம்.சி.சி. ஸ்பிரிட் ஆஃப் காலின் கவுட்ரி நினைவுச் சொற்பொழிவாற்ற சங்ககாரா அழைக்கப்பட்டிருந்தார். மிக இளம் வயதில் (33) அந்த வாய்ப்பைப் பெற்றவர் இவர். அதில் அவர் ஆற்றிய உரை இவரை கிரிக்கெட் உலகின் பண்பட்ட சிந்தனையாளராக அடையாளம் காட்டியது. கிரிக்கெட் உலகிலும் பொதுவாக விளையாட்டு அரங்கிலும் அரங்கேறும் விரும்பத்தகாத அம்சங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார். விளையாட்டு அரங்கின் தூய்மையைக் காப்பதற்கான சிந்தனைகளை முன்வைத்தார். அந்தப் பேச்சு உலக அரங்கில் அவரை முக்கியமான சிந்தனையாளராக அடையாளம் காட்டியது.
சிகரத்தில்…
சங்ககாரா ஆடிய காலகட்டத்தில் மற்றவர்களைவிடவும் முன்னிலையில் இருந்தார் என்பதே அவரைத் தனித்துக் காட்டுகிறது. அவர் ஆடிய காலகட்டத்தில் சச்சின், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், ராகுல் திராவிட், அலிஸ்டர் குக், வீரேந்திர சேவாக், மைக்கேல் கிளார்க் ஆகியோரின் ஆட்டங்கள் சங்ககாராவைவிடப் பின்தங்கியே இருந்திருக்கின்றன. இவர்கள் அனைவருமே இந்தக் காலகட்டத்தில் 100 போட்டிகளுக்கு மேல் ஆடியவர்கள்.
இவர்களில் காலிஸ் மட்டுமே சங்ககாராவைவிட அதிக சராசரி (சங்ககாரா 57.40, காலிஸ் 58.50) வைத்திருக்கிறார். சச்சின் பாண்டிங், திராவிட் முதலானவர்கள் சங்ககாராவுக்கு முன்பே களம் கண்டு பல ஆண்டுகள் சிறப்பாக ஆடிவந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது என்றாலும் தான் ஆடிய காலகட்டத்தில் சங்ககாரா முன்னிலையில் இருந்தார் என்பதையும் மறுக்க முடியாது.
கிரிக்கெட்டின் எல்லா விதமான வடிவங்களிலும் 15 ஆண்டுகளாக ரன் மழை பொழிந்த அந்த மட்டை தனக்குத்தானே ஓய்வு கொடுத்துக்கொண்டுவிட்டது. தனக்குப் பின் வந்த, இனி வரவிருக்கும் மட்டையாளர்கள் அனைவருக்குமான சவாலாகவும் இதைப் போலச் சாதிக்க வேண்டும் என்னும் உத்வேகமாகவும் அந்த மட்டை சிகரத்தில் கம்பீரமாக வீற்றிருக் கிறது.
முறியடிக்கப்படாத சாதனைகள்
அதிரடி ஆட்டத்திற்குச் சளைக்காத சங்ககாரா, டெஸ்ட் போட்டிகளில் நீண்ட இன்னிங்ஸுக்கும் பேர்போனவர். 8 முறை அவர் 500 நிமிடங்களுக்கு மேல் களத்தில் நின்றிருக்கிறார். இந்தச் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. சுனில் கவாஸ்கர், ராகுல் திராவிட், மஹேல ஜெயவர்த்தனா ஆகிய மூவரும் தலா 7 முறை இதைச் செய்திருக்கிறார்கள்.
கேப்டனாக இருந்தபோது இவரது ரன் சராசரி 69.60. டான் பிராட்மேன் (101.51), மர்வன் அட்டப்பட்டு (71.89) ஆகிய இருவர் மட்டுமே இவ்விஷயத்தில் இவரைக் காட்டிலும் முன்னிலையில் இருக்கிறார்கள்.
சங்ககாரா ஆடிய காலகட்டத்தில் மற்றவர்களைவிடவும் முன்னிலையில் இருந்தார் என்பதே அவரைத் தனித்துக் காட்டுகிறது.