விளையாட்டு

ரஞ்சி ட்ராபி: கடும் காய்ச்சல், இருமல் அவதியிலும் 30 பவுண்டரி 8 சிக்ஸ்: அதிரடி முச்சதம் கண்டு வீழ்த்த முடியாது நின்ற மும்பை வீரர்

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசத்துக்கு எதிராக இன்று (புதன், 22-1-20) முடிந்த ரஞ்சி ட்ராபி போட்டியில் மும்பை வீரர் சர்பராஸ் கான் தன் முதல் முச்சத மைல்கல்லை எட்டி சாதனை புரிந்தார்.

301 நாட் அவுட் என்ற அவரது இன்னிங்சில் 30 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் அடங்கும், மொத்தம் 391 பந்துகளைத்தான் சந்தித்தார் சர்பராஸ் கான். இந்த இன்னிங்ஸ் ஒரு மாரத்தான் இன்னிங்ஸ், ஏன் எனில் உத்தரப்பிரதேசம் தன் முதல் இன்னிங்சில் 625/8 என்று பெரிய ஸ்கோரை எட்டியிருந்தது. இதில் யுடி.யாதவ் என்ற உ.பி. விக்கெட் கீப்பர் 239 பந்துகளில் 203 ரன்களை விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆடிய மும்பை அணி 128/4 என்று தடுமாறியது ஆனால் அதன் பிறகு லாத் (98), கேப்டன் ஆதித்ய தாரே (97), முலானி (65), சர்பராஸ் கான் 301 நாட் அவுட் ஆகியோர் சேர்ந்து ஸ்கோரை 688/7 என்று கொண்டு சென்று ஆட்டம் ட்ரா ஆனாலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்றதால் மும்பை அணி 3 புள்ளிகளைப் பெற்றது.

2 நாட்கள் முழுதும் களத்தில் காய்ச்சலுடன், இருமலுடன் ஆடி நாட் அவுட்டாக வெளியே வந்துள்ளார் சர்பராஸ் கான், அனைத்திற்கும் மேலாக உ.பி.யின் மிகப்பெரிய இலக்கை கடக்க வேண்டும் என்ற இமாலயக் குறிக்கோளும் அவரை உந்தியுள்ளது.

இந்த முச்சதம் அடித்த சர்பராஸ் கான் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதியுற்று வந்தார், அவர் இறங்குவதே சிரமம் என்ற நிலைதான் இருந்தது.

சர்பராஸ் கான் கூறும்போது, “எனக்கு 2-3 நாட்களாகவே காய்ச்சல், இருமல், நான் இறங்க முடியாத நிலைதான், எனக்குப் பதில் தாரே இறங்கி விளையாட வேண்டும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு உணர்வு நான் இறங்கி ஆட முடிவு செய்தேன்.

திங்கள் இரவு கூட நான் உடல் நிலை சரியில்லாமல்தான் இருந்தேன். ஆனால் களத்தில் நான் இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு எப்பவும் உண்டு. எனவே அணிக்காக களமிறங்க முடிவு செய்தேன்.

எனக்கு உடம்பு சரியில்லை, இன்று தேநீர் இடைவேளையின் போது கூட கடும் களைப்படைந்திருந்தேன், போதும் என்று கூட நினைத்தேன். நாங்கள் அவர்களின் 600 ரன்களுக்கு களத்தில் காய்ந்தது போல் அவர்களும் காய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது” என்றார் சர்பராஸ் கான்.

SCROLL FOR NEXT