இலங்கை வீரர் மதிஷா பதிரணா 
விளையாட்டு

யூ19 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு எதிராக 175 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய 17 வயது இலங்கை பந்துவீச்சாளர்; நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியின் 17 வயது வீரர் மதிஷா பதிரணா 175 கி.மீ. வேகத்தில் பந்து வீசி மிரட்டினார்.

இதுவரை அதிகபட்சமாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் மணிக்கு 161.3 கி.மீ வேகத்தில் பந்து வீசியதே அதிகபட்சமாகும். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷோயப் அக்தர் இந்த மிரட்டல் பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

அதன்பின் ஷான் டெய்ட், பிரட் லீ ஆகியோர் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பந்துவீசியுள்ளனர். ஆனால், இதுபோல் 175 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவின் புளோபென்டைன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் இலங்கையின் 17 வயது வீரர் மதிஷா பதிரணா 8 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் சேர்த்தது. 298 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 45.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்து 91 ரன்களில் தோல்வி அடைந்தது.

இலங்கை வீரர் மதிஷீ பதிரணா பந்து வீசும் ஸ்டைல் மூத்த வீரரும் கேப்டனுமான லசித் மலிங்காவைப் போன்று இருப்பதால், அவரை ஜூனியர் மலிங்கா என்று அந்நாட்டு ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

பதிரணா வீசிய 4-வது ஓவரில் வீசிய பந்துதான் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் சென்றது. ஆனால், அந்தப் பந்து வைடாக சென்றதால், அந்த இந்திய பேட்ஸ்மேனால் அடிக்க முடியவில்லை. ஆனால், பதிரணா பந்துவீசியபோது அவரின் பந்துவீச்சு வேகம் 175 கி.மீ. வேகம் என்று ஒருபுறம் அறிவிக்க, தொலைக்காட்சியில் வலதுபுறம் உள்ள அறிவிப்பில் 108 கி.மீ. என்று அறிவிக்கப்பட்டதால் வேகத்தைக் கணக்கிடுவதில் குழப்பம் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT