நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் விலகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும், ஷிகர் தவணுக்கு ஏற்பட்ட தோள்பட்டைக் காயத்தால் அவர் சிலவாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவர் அணியில் இடம்பெறமாட்டார் என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பெங்களூரில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை பீல்டிங் செய்ய ஷிகர் தவண் முற்பட்டபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து ஷிகர் தவண் அழைத்துச் செல்லப்பட்டார், அவருக்கு பதிலாக யஜூவேந்திர சாஹல் பீல்டிங் செய்தார். இந்திய அணி பேட்டிங்கின்போதும் ஷிகர் தவண் களமிறங்கவில்லை.
இந்நிலையில், ஷிகர் தவணுக்கு மருத்துவமனையில் எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவரின் தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சில வாரங்கள் ஷிகர் தவண் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த போதிலும் காயம் காரணமாக அவர் விலகுவார் எனத் தெரிகிறது.
நியூஸிலாந்துக்கு நேற்று புறப்பட்டுச் சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
ஆனால் ஷிகர் தவணை அணியில் இருந்து நீக்குவது குறித்தும், புதிய வீரரை அறிவிப்பது குறித்தும் பிசிசிஐ அமைப்பு இதுவரை அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை.
நியூஸிலாந்தில் தற்போது இந்திய ஏ அணி சென்று அந்நாட்டு அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த அணியில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வுக்குழுவின் ஆலோசனையில் இருக்கிறார்கள். இவர்கள் மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.