விளையாட்டு

இந்தியாவின் நம்பர் 1 சென்னை டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி: ஜோகோவிச்சுடன் மோதும் அரிய சந்தர்ப்பத்தை இழந்தார்

செய்திப்பிரிவு

மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் டாப் ரேங்க் இந்திய வீரரும் சென்னையைச் சேர்ந்தவருமான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஜப்பான் வீரருக்கு எதிராக நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து உலகின் நம்பர் 2 வீரர் நோவக் ஜோகோவிச்சுடன் மோதும் அருமையான ஒரு வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழந்தார் குணேஸ்வரன்.

இவர் 122ம் தரவரிசையில் உள்ளார், ஆனால் இவரை விடவும் 22 இடங்கள் பின்னால் உள்ளார் ஜப்பான் வீரர் தத்சுமா இடோ. ஆனால் இடோ 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரங்கள் நடைபெற்றது.

ஓரளவுக்கு நல்ல ரேங்கிங்கில் இருந்ததால் இதற்கு முன்னர் விம்பிள்டன், யு.எஸ். ஓபன், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம்களில் பங்கேற்றார் பிரஜ்னேஷ்.

இந்நிலையில் இவரது தோல்வியினால் ஒற்றையரில் இந்திய சவால் முடிவுக்கு வந்தது.

இரட்டையர் மகளிர் பிரிவில் சானியா மிர்சா-நாடியா கிசனோக் பட்டம் வெல்வார்களா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

SCROLL FOR NEXT