விளையாட்டு

பெய்லியின் கடைசி நேர அதிரடியில் பஞ்சாப் 156 ரன்கள்

செய்திப்பிரிவு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மொஹாலியில் நடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தெர்ந்தெடுத்தது. துவக்க வீரர் சேவாக் ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்ஸருக்கும் விளாசி தனது கணக்கை ஆரம்பித்தார்.

இரண்டாவது ஓவரிலும் சேவாக் ஒரு சிக்ஸர் அடிக்க பஞ்சாப் வழக்கம் போல அதிக ரன்களைக் குவிக்கப் போகும் ஆட்டம் இது என ரசிகர்கள் கொண்டாடினர். துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் சேவாக் ரன் அவுட் ஆனார். தொடர்ந்த வோஹ்ரா மற்றும் மார்ஷ் இணை 7.1 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது.

10-வது ஓவரில் மார்ஷ் 30 ரன்களுக்கு (17 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் வொஹ்ரா 36 ரன்களுக்கு (34 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மேக்ஸ்வெல்லும் 2 ரன்களுக்கு வீழ்ந்து அதிர்ச்சியளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய மும்பை, பந்துவீச்சை சீராக்கி ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தியது. 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்த பஞ்சாப் 15-வது ஓவரின் முடிவில் 107 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. களத்திலிருந்த படேல் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பஞ்சாப் கேப்டன் பெய்லியிடம் அணியை நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு வந்தது.

பெய்லி தனக்கு வந்த பொறுப்பை சிறப்பாகக் கையாண்டு 39 முக்கிய ரன்களைச் சேர்த்தார் இதில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.

SCROLL FOR NEXT