இந்திய அணிக்கு மிகப்பெரிய தோல்வியை அளித்த ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட் வெற்றியில் டேவிட் வார்னர் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பும்ரா வீசிய யார்க்கர்கள், பவுன்சர்கள் தனக்கு ஆச்சரியம் அளித்ததாக டேவிட் வார்னர் தெரிவித்தார்.
கேப்டன் ஏரோன் பிஞ்ச்சும் பிரமாதமாக ஆடி 110 ரன்களைக் குவித்து இந்திய வலியை அதிகரித்தார்.
இந்நிலையில் பும்ரா, குல்தீப் பவுலிங் குறித்து டேவிட் வார்னர் கூறியதாவது:
பும்ரா போன்றவர்களை எதிர்கொள்ளும் போது ஆடாமல் அசையாமல் நேர் கொண்ட பார்வையில் எதிர்கொள்ள வேண்டும். பிரெட் லீ போல் ஒருவர் நீண்ட தூரம் ஓடி வந்து பிறகு கொஞ்சம் தள்ளாடி பிறகு உடனே திடீரென 150 கிமீ வேகத்தில் வீசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்குப் பழக சிறிது நேரம் தேவைப்பட்டது, பும்ராவின் பெரிய திறமையாகும் அது.
அவரது பவுன்சர்கள், யார்க்கர்கள் சர்ப்ரைஸ்தான். பிறகு ஒரு வேகம் குறைந்த பந்தை வீசுகிறார், ஆகவே அவரை ஆடுவது கடினம் தான். லஷித் மலிங்கா அவரது உச்சத்தில் இருந்த காலத்தில் வீசியது போல் பும்ராவின் பந்து வீச்சு இருந்தது. 140 கிமீ வேகத்தில் வீசி ஸ்விங் செய்தார்.
ஆனால் பவுன்சரோ, யார்க்கரோ நம்மை நோக்கி வரும் என்று நமக்குத் தெரியும், அதை எப்படி ஆடப்போகிறோம் என்பதுதான் விஷயம்.
குல்தீப் யாதவ்வும் மாற்று பந்துகளை வீசுகிறார். இப்போதெல்லாம் அவர் சற்றே மெதுவாக வீசுகிறார். ரஷீத் கானிடமிருந்து மாறுபடுகிறார், ரஷீத் கான் மணிக்கு 100கிமீ வேகத்தில் சுழற்பந்து வீசக்கூடியவர். விளக்கொளியில் இடது கை சைனமன் பவுலர் பந்துகளை கணிப்பது சற்று கடினமே, என்றார் டேவிட் வார்னர்.