மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 10 ரன்களில் மலிவாக ஆட்டமிழந்தார், இதற்கு ஒரு காரணம் ஷிகர் தவண், கமினிஸின் ஒரு ஓவரை மெய்டனாக்கியது என்று கூற முடியும்.
ஆட்டம் தொடங்கிய போது முதல் ஓவரில் ரோஹித் சர்மா, ஸ்டார்க் வீசிய இரண்டு தளர்வான பந்துகளை ஆஃப் திசை பவுண்டரிக்கு அனுப்பி பாசிட்டிவ் ஆகத் தொடங்கினார். இதே முதல் ஓவரில் ரோஹித் ரன் அவுட் ஆகியிருப்பார், ஆனால் வார்னர் த்ரோ நேரடியாக ஸ்டம்பில் அடிக்கவில்லை. தப்பினார் ரோஹித்.
ஆனால் இன்னிங்சின் 4வது ஓவரில் உலகின் இப்போதைய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பாட் கமின்ஸ், ஷிகர் தவணுக்கு அருமையான ஆஃப் ஸ்டம்ப் லைனில் உடலுக்குக் குறுக்காக மிகத் துல்லியமாக வீச, இலங்கை அணிக்கு எதிராக இறங்கி வந்து ஆடி வீரம் காட்டிய ஷிகர் தவண் இந்த ஓவரில் எதற்கு வம்பு என்று பாட் கமின்ஸின் 6 பந்துகளையும் எச்சரிக்கையுடன் ஆடி மெய்டன் ஓவர் ஆக்கினார்.
இதற்கு அடுத்த ஓவர்தான் ரோஹித் சர்மா, மிட்செல் ஸ்டார்க்கின் முதல் லெக் திசை பவுண்டரி பந்தை மட்டையில் தொடாமல் விட்டு டாட் பால் ஆனது. அடுத்த பந்தை தடுத்தாடினார். ஆகவே 7 பந்துகள் ரன் வரவில்லை.
இதனையடுத்து சற்றே பிரஷர் ஆன ரோஹித் சர்மாவின் மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டு ஸ்டார்க் ஒரு பந்தை ஃபுல் லெந்த் ஆக இல்லாமல் ஒரு அரைகுறை லெந்தில் வீச ரோஹித் சர்மா அதனை ஓவர் பிட்ச் என்று தவறாகக் கணித்து பந்தை அடித்தார், அது காற்றில் மிட் ஆஃபில் வார்னர் கைக்குச் சென்றது ரோஹித் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இப்போது தவண் கொஞ்சம் தன் ரிதத்தை கண்டுபிடித்துக் கொள்ள 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களை 33 பந்துகளில் எடுத்து ஆடிவருகிறார், ராகுல் 7 ரன்களுடன் இருக்கிறார், தவணும் ஆட்டமிழந்திருப்பார், ஆனால் அவர் லெக் திசையில் அடித்த ஷாட் ஒன்று ஷார்ட் மிட்விக்கெட்டில் லபுஷேனுக்கு மிக அருகில் காற்றில் சென்றது டைவ் அடித்தார் லபுஷான் ஆனால் கேட்ச் எடுக்க முடியவில்லை. இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 45/1 என்று சென்று கொண்டிருக்கிறது.