இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.
ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதற்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இரு அணியிலும் பேட்டிங்,பந்து வீச்சுக்கு நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் இம்முறை கோப்பையை வெல்வதில் கடும்போராட்டம் நிலவக்கூடும். சிறிதுஓய்வுக்கு பின்னர் திரும்பியுள்ள ரோஹித் சர்மா புத்துணர்ச்சியுடன் மீண்டும் ரன் வேட்டை நிகழ்த்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
அவருடன் தொடக்க வீரராக களமிறங்குவதில் ஷிகர் தவண், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவுகிறது. இதில் அனுபவத்தை கருத்தில் கொண்டு ஷிகர் தவணுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஒருவேளை இருவரையும் அணி நிர்வாகம் களமிறக்க விரும்பினால் கே.எல்.ராகுல் 3-வது வீரராக விளையாடலாம். இந்த நிலை ஏற்பட்டால் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்தில் களமிறங்குவார்.
இவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரது இடங்களும் உறுதி செய்யப்பட்டதுதான். கேதார் ஜாதவ் அல்லது மணீஷ் பாண்டே ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
கடந்த முறை இரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியதால் இந்திய அணி எதிர்விளைவை சந்தித்தது. இதனால் இம்முறை குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர்சுழற்சி முறையில் பயன்படுத்தப்படக்கூடும். இதில் குல்தீப் யாதவுக்கு முன்னுரிமை வழங்கப்படக்கூடும். ஏனெனில் கடந்த முறை அவர், ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி ஆகியோருடன் நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாக்குர் இடம் பெறக்கூடும்.
ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷான், அலெக்ஸ் காரே, பீட்டர்ஹேண்ட்ஸ்கம்ப் உள்ளிட்டோர் நடுவரிசையில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட், கேன் ரிச்சர்ட்சன் வேகக் கூட்டணி இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லைகள் தரக்கூடும். சுழற்பந்து வீச்சில் பிரதானவீரராக ஆடம் ஸம்பா களமிறக்கப்படலாம்.
நேரம்: பிற்பகல் 1.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்