அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இஸ்னர் தனது காலிறுதியில் 7-6 (4), 6-4 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிச்சர்ட்ஸ் பெரங்கிஸை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் 19 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார் இஸ்னர்.
இஸ்னர் தனது அரையிறுதியில் சகநாட்டவரான டெனிஸ் குல்டாவை சந்திக்கிறார். குல்டா தனது காலிறுதியில் 7-5, 6-0 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டூடி செலாவை தோற்கடித்தார்.
நடப்பு சாம்பியனான இஸ்னர், அரையிறுதியில் வெற்றி பெறும் பட்சத்தில் அட்லாண்டா ஓபனில் கடந்த 6 ஆண்டுகளில் 5 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியவர் என்ற பெருமையைப் பெறுவார். 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட இஸ்னர், 2012-ல் அரையிறுதியோடு வெளியேறினார். பின்னர் 2013, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றார்.
டெனிஸ் குல்டாவுக்கு எதிரான அரையிறுதி குறித்துப் பேசிய இஸ்னர், “குல்டா உறுதியான வீரர். மிக வேகமாக ஆடக்கூடியவர். நாங்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். நான் மூத்த வீரராக இருப்பதால் அவருக்கு எந்த கருணையும் காட்ட தேவையில்லை. குல்டா தனது டென்னிஸ் வாழ்க்கையின் மிகச்சிறப்பான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
அட்லாண்டாவில் தொடர்ந்து 6-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் இஸ்னர், இங்கு 21 ஆட்டங்களில் விளையாடி 18 வெற்றிகளைப் பெற்றுள்ளார். 3-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளார்.