விளையாட்டு

ஐசிசி டி 20 தரவரிசையில் கே.எல்.ராகுல், விராட் கோலி முன்னேற்றம்

செய்திப்பிரிவு

சர்வதேச டி 20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி 20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தரவரிசைபட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கே.எல்.ராகுல் 760 புள்ளிகளுடன் 6-வதுஇடத்தை பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2 ஆட்டங்களில் கே.எல்.ராகுல் 45 மற்றும் 54 ரன்கள்சேர்த்திருந்தார். இதன் மூலம் அவருக்கு 26 புள்ளிகள் கிடைத்திருந்தது.

விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளார். புனே ஆட்டத்தில் அரை சதம் அடித்த மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். மணீஷ் பாண்டே 4 இடங்கள் முன்னேறி 70-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் நவ்தீப் சைனி 146-வது இடத்தில் இருந்து 98-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷர்துல் தாக்குர் 92-வது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் தலா 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர். ஜஸ்பிரித் பும்ரா 8 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தை பிடித்துள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணிக்கு கூடுதலாக இரு புள்ளிகள் கிடைத்துள்ள போதிலும் 260 புள்ளிளுடன் 5-வது இடத்தில் தொடர்கிறது. அதேவேளையில் டி 20 தொடரை இழந்துள்ள இலங்கை அணி 2 புள்ளிளை இழந்து 236 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT