இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டம் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் குவாஹாட்டியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழை மற்றும்ஆடுகள ஈரப்பதம் காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இந்தூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 143 ரன்கள்இலக்கை விரட்டிய இந்திய அணி 15 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது டி 20 ஆட்டம் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. அனுபவமற்ற வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி இந்தூரில் இந்திய அணிக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கவில்லை.
இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் சில பரிசோதனை முயற்சிகளை செய்துபார்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த 8 ஆட்டங்களாக வெளியே அமரவைக்கப்பட்டுள்ள மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க சீனியர் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி ஆகியோர் சற்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தூர் டி 20 ஆட்டத்தில் இவர்கள் கூட்டாக 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பு செய்திருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்படக்கூடும்.
பேட்டிங்கில் காயத்தில் இருந்துமீண்டு வந்துள்ள ஷிகர் தவண், இந்தூர் போட்டியில் வழக்கம் போலமந்தமாகவே பேட் செய்தார். அணியில் தனது இடத்தை வேரூன்றிக் கொள்ள வேண்டுமானால் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஷிகர் தவண். அதேவேளையில் இந்தூர் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா, தனது தரநிலைக்கு தகுந்தவாறு பந்து வீச தவறினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் நிறைவான செயல் திறனைவெளிப்படுத்துவதில் பும்ரா தீவிரம் காட்டக்கூடும்.மலிங்கா தலைமையிலான இலங்கை அணி வலுவான இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமானால் அதீத திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
நேரம்: இரவு 7
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்