கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், கபில்தேவாக நடிக்கும் '83’ என்ற திரைப்படம் 1983 உலகக்கோப்பையை எங்கிருந்தோ வந்து வென்ற ‘கபில்ஸ்டெவில்ஸ்’ இந்திய அணியின் வரலாற்றுக் கணத்தை மீண்டும் ஒருமுறை மக்கள் கண் முன் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏப்ரல் 10ம் தேதி இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
பலவீனமான அணி என்று கருதப்பட்ட நிலையில் எப்படி அதைச் சாதிக்க முடிந்தது, அதுவும் வலுவான, நம்பர் 1 மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக? என்ற கேள்வியை கபில் முன் எழுப்பிய போது, “நாம் ஒன்றை மகிழ்வுடன் செய்யும் போது எதுவும் கடினமல்ல. ஒன்றின் மீது நீங்கள் உணர்வுடன் ஒன்றிவிட்டீர்கள் என்றால் எதுவும் கடினமல்ல. நான் எதையும் என் வாழ்க்கையில் கடினமாக நினைத்ததில்லை.
வாழ்க்கையையே நான் அப்படித்தான் பார்க்கிறேன், ஒன்றை நாம் நேசிக்கும் போது கடினமான காலம் என்ற ஒன்று இல்லை. நாட்டுக்காக ஆடும்போது எதுவும் கடினம் அல்ல.
“அன்றைய தினம் அல்ல, எப்போதுமே 100% பங்களிக்க வேண்டும் என்பதே என் செய்தி. இறுதிக்கு வந்து விட்டோம், என்றால் நன்றாக ஆடித்தானே வர முடியும். இப்படித்தான் பேசினோம். களத்தில் எதிரணியினரை நம்மை விட பெரிய அணி என்று நினைப்பதை விட நாம் எப்படி சிறந்த அணி, என்று பாசிட்டிவ் ஆக யோசித்தோம்.
விளையாட்டில் முடிவின் மீதான எந்த ஒரு அழுத்தமும் உங்களை தாக்கக் கூடாது, விளையாட்டை நன்றாக ஆட வேண்டும் அவ்வளவே. நாங்கள் சிறந்த அணி ஒவ்வொரு போட்டியையும் வெல்லவே இங்கு வந்துள்ளோம் என்று தொடக்கம் முதலே கருதினேன்.
ஒவ்வொரு கணமும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியதுதான். பல்வீஙர் சிங் சாந்து முதல் விக்கெட்டை வீழ்த்தினாரே, கார்டன் கிரீனிட்ஜ் பவுல்டு அதுவும் கேம் சேஞ்சர்தான், ஏன் நான் விவ் ரிச்சர்ட்ஸுக்குப் பிடித்த கேட்சை மட்டும் திருப்பு முனையாகக் கருத வேண்டும்? ஒவ்வொரு அடியிலும் ஆட்டத்தை திருப்பினோம்” என்றார்.
வீடியோ ஸ்ட்ரைக்கினால் கபில்தேவின் மகா இன்னிங்ஸான 175 நாட் அவுட் இந்திய ரசிகர்களால் இன்று வரை பார்க்க முடியவில்லை, ஆனால் ‘83’ திரைப்படம் இதனையும் மறு உருவாக்கம் செய்துள்ளது 83 படத்தின் சிறப்பம்சம்.