ஏடிபி கோப்பை தொடரில் ஸ்பெயின், செர்பியா அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
ஆஸ்திரேலியாவில் 24 நாடுகள் கலந்து கொண்டுள்ள ஏடிபி கோப்பைக்கான டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்பெயின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால், பவுதிஸ்டா அகுட் ஆகியோர் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் ரபேல் நடால், காரேனோ பஸ்டா ஜோடி வெற்றியை வசப்படுத்தியது.
இந்த வெற்றியால் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த ஸ்பெயின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி தனது முதல் இரு ஆட்டங்களில் உருகுவே, ஜார்ஜியா அணிகளை வென்றிருந்தது. ஸ்பெயின் அணியானது 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்காமல் நாக் அவுட் சுற்றில் கால்பதித்துள்ளது.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தி கால் இறுதியில் நுழைந்தது. ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச், டசன் லஜோவிக் வெற்றி பெற்ற நிலையில் இரட்டையர் பிரிவில் விக்டர் டிரோக்கி, நிகோலா காசிக் ஜோடி தோல்வி கண்டது. செர்பியா ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ் அணிகளையும் வீழ்த்தியிருந்தது. லீக் சுற்றில் 9 ஆட்டங்களில் செர்பியா 7 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பதிவு செய்தது.