விளையாட்டு

விராட் கோலியை கவர்ந்திழுத்த இளம் வேகப்பந்து வீச்சாளர் : உலகக்கோப்பை டி20யில் தேர்வாகிறார்?

பிடிஐ

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை டி20 தொடரில் கர்நாடகாவைச் சேர்ந்த பிரசித் கிருஷ்ணா என்ற வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் தேர்வாகலாம் என்று தெரிகிறது.

காரணம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கடைக்கண் பார்வை கர்நாடக அணி வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீது விழுந்திருப்பதே. ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டவர் பிரசித் கிருஷ்ணா.

இவர் உலகக்கோப்பை டி20 இந்திய அணியில் ‘சர்ப்ரைஸ் பேக்கேஜ்’ ஆக இருக்கலாம் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கூறும்போது, “ஒரு வீரர் சர்ப்பிரைஸ் பேக்கேஜாக அணிக்குள் வருவார் என்று நான் நினைக்கிறேன். உள்நாட்டு கிரிக்கெட்டில் பிரசித் கிருஷ்ணா பிரமாதமாக வீசியிருக்கிறார்” என்றார்.

கோலியின் கடைக்கண் பார்வை இவர் மீது விழுந்து விட்டதால் நியூஸிலாந்து தொடருக்கே பிரசித் கிருஷ்ணா வாய்ப்புப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா சூப்பர் ஓவரில் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

23 வயதாகும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா 41 லிஸ்ட் ஏ போட்டிகளில் 67 விக்கெட்டுகளையும் 28 டி20 போட்டிகளில் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கொல்கத்தா அணிக்காக வலைப்பயிற்சியில் மிகப்பெரிய அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல் போன்றவர்களுக்கு வீசிக் கட்டுப்படுத்திய அனுபவம் பெற்றவர் பிரசித் கிருஷ்ணா.

SCROLL FOR NEXT