சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி தன் 2வது இன்னிங்சில் படுமோசமாக ஆடி 136 ரன்களுக்குச் சுருண்டு தொடரை 0-3 என்று இழந்தது. நேதன் லயன் இந்த டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணி தன் 2வது இன்னிங்சில் டேவிட் வார்னரின் சதத்துடன் (111 நாட் அவுட்), 217/2 என்று டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 48வது ஓவரில் 136 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்ததோடு3-0 ஒயிட் வாஷ் பெற்றது. நேதன் லயன் 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
416 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய நியூஸிலாந்து அணி விரைவில் தங்கள் அடித்தளத்தை இழந்தது, உடையும் பிட்சில் டாம் பிளண்டெல், டாம் லேதம், ஜீத் ராவல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் வரிசையாக நடையைக் கட்டினர்.
நேதன் லயன் பந்துகள் ஸ்பின் ஆகி எழும்பின, சில பந்துகள் எதிர்பார்ப்புக்கு மாறாகச் செல்ல நியூஸிலான்து பேட்டிங் மிகமிகச் சாதாரணமாக ஆனது. ஆஸி.யின் புதிய நட்சத்திரம் லபுஷேன் 5 டெஸ்ட் போட்டிகளில் 896 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
டாம் பிளண்டெல் ஸ்டார்க்கின் வைடு பந்தை அடிக்கப் போய் நேதன் லயனின் அபார பாயிண்ட் கேட்சுக்கு வெளியேறினார். டாம் லேதமுக்கு நடுவர் எராஸ்மஸ் தவறாக எல்.பி.தீர்ப்பளிக்க அவரும் வெளியேறினார். பந்து லெக் ஸ்டம்பைத் தாக்காது என்று தெரிந்தது. ஜீத் ராவல் நேதன் லயன் பந்தை எட்ஜ் செய்தார், ஆனால் அதுவுமே கொஞ்சம் கடுமையான தீர்ப்புத்தான், அதே போல் கிளென் பிலிப்சும் நேதன் லயன் பந்தை டிம் பெய்னிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். ராஸ் டெய்லர் மிக அருமையான பாட் கமின்ஸ் பந்தில் ‘ஸ்கொயர்’ ஆனார் பந்து ஆஃப் ஸ்டம்பை பெயர்த்தது.
கொலின் டி கிராண்ட் ஹோம் கொஞ்சம் ஆஸி பந்து வீச்சின் அச்சுறுத்தலுக்கு சற்றே சவால் அளித்தார், நேதன் லயனை கவருக்கு மேல் அடித்த சிக்ஸ் மகா அற்புதம், அவர் அரைசதம் கடந்தார். பிறகு 52 ரன்களில் மோசமான ஷாட்டுக்கு ஆட்டமிழந்தார். டாட் ஆஸ்ட்ல் 17 ரன்களுக்கு பேட்டின்சனின் அற்புத கேட்சுக்கு வெளியேறினார். சோமர்வில் ஸ்டார்க்கின் அதியற்புத ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கருக்கு மிடில் ஸ்டம்பை இழந்தார். நியூஸிலாந்து அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்.
இந்த வெற்றி 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை ஆஸி. எதிர்கொள்ளும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்ட நாயகன் தொடர் நாயகன் இரண்டும் லபுஷான் தட்டிச் சென்றார்.
ஏப்ரல் 1993க்குப் பிறகு நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 31 டெஸ்ட்களில் ஒரேயொரு வெற்றியைத்தான் பெற்றுள்ளது. 22 போட்டிகளை இழந்து 7 போட்டிகள் ட்ரா ஆகியுள்ளது. இந்தத் தோல்வி மூலம் 6 டெஸ்ட்களை தொடர்ச்சியாக நியூஸிலாந்து ஆஸி.யிடம் இழந்துள்ளது, கடைசியாக ஹோபார்ட்டில் பெற்ற வெற்றி மட்டுமே நியூஸிலாந்தின் தொலை தூர நினைவில் உள்ளதாகும்.