குவஹாட்டியில் நேற்று நடைபெற இருந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் மழை விளையாடியதால், ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தைப் போக்க ஹேர் ட்ரையர், வேக்கம் க்ளீனர், அயர்ன் பாக்ஸ்,சூப்பர் சக்கர் என பலவற்றை வைத்து முயற்சித்துப் பார்த்தும் கடைசியில் எதும் பயனளிக்காது எனத் தெரிந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவுக்கு பயணம் வந்துள்ள லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் மழையை எதிர்பார்க்கவில்லை.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஷிகர் தவண் ஆகியோரின் ஆட்த்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தார்கள். அரங்கிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழுமியிருந்தனர்
ஆனால், போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. ஒருமணிநேரத்துக்குபின் மீண்டும் ஆட்டம் தொடங்க வாய்ப்பிருப்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆடுகளத்துக்குள் ஈரப்பதம் கூடிவி்ட்டது. மேலும், மைதானமும் மழையால் சேதமடைந்தது, ஆடுகளம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிமட்டுமே மறைக்கப்பட்டிருந்தது
ஆடுகளத்தின் ஈரப்பதத்தை குறைத்து போட்டியை நடத்திவிடலாம் என்று களபராமரிப்பாளர்கள் பலவாறு முயன்றார்கள் ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தைப் போக்க ஹேர் ட்ரையர், வேக்கம் க்ளீனர், அயர்ன் பாக்ஸ் என பலவற்றை வைத்து முயற்சித்துப் பார்த்தும் கடைசியில் எதும் பயனளிக்கவில்லை. 5 ஓவர்கள் கொண்ட போட்டியாவது நடத்திவிடலாம் என்று அசாம் கிரிக்கெட் நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்
ஆனால் கடைசியாக 9.45 மணிக்கு வந்து களத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியை நடத்த தகுதியானதாக இல்லை என அறிவித்ததால், ஒருபந்து கூடவீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “ சர்வதேச போட்டிக்கு இதுபோன்று மோசமாகவா ஆடுகளத்தை பராமரிப்பார்கள். ஓட்டையான பிளாஸ்டிக் பாய்கள் மூலம் மழைநீர் ஆடுகளத்தில் இறங்கிவிட்டது. மைதானத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒருசர்வதேச போட்டிக்கு இதுபோல் மோசமாக தயாராகக்கூடாது” என வேதனை தெரிவித்தார்
அதுமட்டுமல்லாமல், ஆடுகளத்தை ஹேர் ட்ரையர், அயர் பாக்ஸ் கொண்டு காய வைத்ததை ட்விட்டரில் நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்தனர்