இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி, இலங்கைஅ ணியின் கேப்டன் லசித் மலிங்கா : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

இலங்கையுடன் டி20 போட்டி: டாஸ் வென்றார் விராட் கோலி: யாருக்கு வாய்ப்பு? ஆடுகளம் எப்படி ?

பிடிஐ

கவுகாத்தியில் இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் வந்துள்ள லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20தொடரில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஷிகர் தவணும் காயத்தில் இருந்து மீண்டு ரஞ்சிக்கோப்பையில் சதம் அடித்து ஃபார்மில் இருக்கிறார். இருவருமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்கம்போல் சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, ரிஷப்பந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சில் பும்ராவுக்கு துணையாக ஷைனி, ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மற்றவகையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் தொடர்கின்றனர்.

இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னான்டோ, குணதிலகா, குஷால் பெரேரா, ஓஷாடா பெர்னான்டோ, ராஜபக்சே, தனஞ்சயா டி சில்வா, தசுன் சனகா, இசுரு உதானா, ஹசரங்கா, லகிரு குமாரா, லசித் மலிங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

ஆடுகளம் எப்படி?

கவுகாத்தி மைதானம் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு நன்கு ஒத்துழைக்கும். இதுவரை இந்த மைதானத்தில் ஒரு டி20 போட்டி மட்டுமே நடந்துள்ளது. கடந்த 2017-ம்ஆண்டு அக்டோபர் 10-ம்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி மோதிய ஆட்டம் மட்டுமே நடந்துள்ளது. இதில் சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

ஆதலால், இங்கு மைதானம் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஒத்துழைப்பதைக் காட்டிலும் சேஸிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும். ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக எழும்பி வரும், அடித்து ஆடுவதிலும் சிரமம் இருக்காது. சுழற்பந்துவீச்சு, ஸ்விங் பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும்.

2-வதாக பந்துவீசும் அணிக்கு பனி பெரும் தொந்தரவாக அமையக்கூடும். பந்தை இறுகப்படித்து வீசுவதில் ஏராளமான சிரமங்கள் இருகக்கூடும் என்பதை உணர்ந்தே கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT