இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் குவாஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஜஸ் பிரித் பும்ரா, தொடக்க வீரரான ஷிகர் தவண் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.26 வயதான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது முதுகு பகுதியில் காயம் அடைந்தார்.
இதனால் சுமார் 4 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் முழு உடற்தகுதியுடன் இன்று களமிறங்குகிறார். அதேவேளையில் தொடக்க வீரரான ஷிகர் தவண் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு தொடரில் பங்கேற்க வில்லை. அதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான டி 20 தொடரில் ஷிகர் தவண் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுதாததால் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷிகர் தவண் சமீபத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ரோஹித் சர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் கே.எல்.ராகுலுடன் இணைந்து அதிரடியான தொடக்கம் கொடுப்பதில் ஷிகர் தவண் முனைப்பு காட்டக்கூடும்.
பந்து வீச்சில் தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததால் பும்ராவையே இந்திய அணி பெரிதும் சார்ந்திருக்கக்கூடும். அவருடன் நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வேகப் பந்து வீச்சு கூடுதல் பலம் பெறும். சுழலில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஆல்ரவுண்டர் வரிசையில் ஷிவம் துபேவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
அதேவேளையில் கடந்த 6 டி 20 ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சஞ்சு சாம்சன் தவித்து வருகிறார். இம்முறையும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். இலங்கை அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்திருந்தது. இந்தத் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் குசால் பெரேராவையே பெரிதும் சார்ந்திருந்தது.
ஏஞ்சலோ மேத்யூஸ், பானுகா ராஜபக்ச, ஓஷாடா பெர்ணான்டோ, தனுஷ்கா குணதிலாக ஆகியோர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு சவால் கொடுக்க முயற்சிக்க முடியும். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளரான வானிடு ஹசரங்கா மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது.
அணிகள் விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி.
இலங்கை: லசித் மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், டசன் ஷனகா, குசால் பெரேரா, நிரோஷன் திக்வெலா, தனஞ்ஜெய டி சில்வா, இஸ்ரு உதனா, பானுகா ராஜபக்ச, ஓஷாடா பெர்ணான்டோ, வானிடு ஹசரங்கா, லகிரு குமரா, குசால் மெண்டிஸ், லக்சன் சந்தகன், கசன் ரஜிதா.
யார் ஆதிக்கம்?
இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 16 டி 20 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் இந்திய அணி 11 ஆட்டங்களிலும், இலங்கை அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேவேளையில் இருதரப்பு டி 20 தொடரை இதுவரை இலங்கை அணியிடம் இந்திய அணி இழந்ததில்லை.
இரவு 7 மணி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்