ஆஸி. வீரர லாபுஷேனிடம் உரையாடி மகிழும் வார்னர் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

பிராட்மேனுக்கு அடுத்து; 'ரன் மெஷின்' லாபுஷேன் இரட்டைச் சதம்: வலுவான நிலையில் ஆஸி. அணி.

க.போத்திராஜ்

இந்த தசம ஆண்டின் முதல் இரட்டைச் சதம் அடித்த மாமுஸ் லாபுஷேனின் அபாரமான ஆட்டத்தால் சிட்னியில் நடந்து வரும் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 454 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

3 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் என்று முதல் நாளில் சேர்த்திருத்த ஆஸ்திரேலிய அணி இன்றைய 2-வது நாளில் 171 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் மாமுஸ் லாபுஷேன் இந்த தசம ஆண்டிலும், இந்த ஆண்டிலும் முதலாவது இரட்டைச் சதம் அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

அபாரமாக ஆடிய லாபுஷேன் 363 பந்துகளில் 19 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 215 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 25 வயதான வலதுகை பேட்ஸ்மேனான லாபுஷேன் 181 ரன்கள் சேர்த்திருந்தபோது, இரட்டைச் சதம் அடிக்க 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த 19 ரன்களை அடிப்பதற்காக ஏராளமான பந்துகளை வீணாக்கி மிக நிதானமாக இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியில் லாபுஷேனுக்கு அடுத்து ஸ்மித் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவர் மட்டுமே ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோர் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக வார்னர் (45), வாட் (22), பெய்ன் (35), ஹெட்(10) ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறினர்.

லாபுஷேனை ஆஸ்திரேலிய அணியின் ரன் மெஷின் என்றே குறிப்பிடலாம். கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் 837 ரன்களை லாபுஷேன் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும். இவரின் பேட்டிங் சராசரியாக 119.6 ரன்கள் வைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து 4 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் பெருமையையும் லாபுஷேன் பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகமான பேட்டிங் சராசரி வைத்திருப்பவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன். இவரின் சராசரி 99.94 ஆகும். அதற்கு அடுத்து இதுவரை ஸ்மித் 62.84 சராசரி வைத்திருந்தார். ஆனால், லாபுஷேனின் தனித்துவமான பேட்டிங்கால் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி 63.63 சராசரி வைத்துள்ளார்.

இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லாபுஷேன் 1,400 ரன்கள் சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியில் 3-வது இடத்தில் களமிறங்கி இரட்டைச் சதம் அடித்த முதல் வீரரும் லாபுஷேன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல் 22 இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த சர்வதே வீரர்களில் லாபுஷேன் 5-வது வீரராக உள்ளார். முதலிடத்தில் பிராட்மேன் (2,115), இங்கிலாந்தின் ஹெர்பெர்ட் சட்கிளிபே (1,611), மே.இ.தீவுகள் வீரர் எவர்டன் வீக்ஸ் (1,520), ஆஸி. வீரர் ஆர்தர் மோரிஸ் (1,408) ஆகியோர் உள்ளனர்.

முதல் நாளில் நேற்று ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்திருந்தது. மாத்யூ வாட் 22 ரன்களிலும், லாபுஷேன் 130 ரன்களிலும் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். மாத்யூ வாட் கூடுதலாக ரன் ஏதும் சேர்க்காமல் 22 ரன்களில் சோமர்வில்லே பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த கேப்டன் பைன், லாபுஷேனுக்கு ஈடுகொடுத்து விளையாடினர். லாபுஷேன் 253 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.

இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 5-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பெய்ன் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் நிதானமாக பேட் செய்த லாபுஷேன் 346 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து ஆஸ்லே பந்துவீச்சில் 215 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரிசை வீரர்களான பாட் கம்மின்ஸ் (8) ரன்களிலும், பட்டின்ஸன் (2) ரன்களிலும் வெளியேறினர். மிட்ஷெல் ஸ்டார்க்(22) ரன்களில் ஆட்டமிழந்தார். 150.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 454 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

லாபுஷேன் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். கடைசி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து தரப்பில் கிராண்ட்ஹோம், வாக்னர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆஸ்லே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT