இந்திய கிரிக்கெட் வீரர்களின் காயங்களை கையாளும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி சமீபகாலமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த பயிற்சி மையத்துக்கு மருத்துவக்குழு, சமூக வலைதளம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் விருத்திமான் சாஹா, புவனேஷ்வர் குமார் ஆகியோரது காயங்களை தேசிய கிரிக்கெட் அகாடமி கையாண்ட விதம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததே மருத்துவக்குழு அமைப்பதற்கான ஆலோசனையை முன்னெடுக்க வைத்துள்ளது. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமியை தவிர்த்து காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர்களை நியமித்திருந்தனர். இது தேசிய கிரிக்கெட் அகாடமி மீதான விமர்சனங்களை வலுவாக்கியது.
இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சமீபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் திராவிட் மற்றும் இரு அமைப்புகளின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மருத்துவக்குழு தேவையின் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மருத்துவக்குழு அமைப்பது தொடர்பாக லண்டன் நகரை அடிப்படையாக கொண்ட போர்ட்டிஸ் மருத்துவமனையுடன் ஆலோசனை நடத்தும்.
மேலும் வேகப்பந்து வீச்சு திட்டங்கள் தொடர்பான துறையில் நீண்ட காலமாக காலியாக இருக்கும் தலைவர் பதவிக்கும் ஊட்டத்துச்சத்து நிபுணர் பணிக்கும் தகுதியான நபர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. வீரர்களின் காயங்கள் குறித்த தகவல், அவர்களின் உடல் நிலை முன்னேற்றம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட சமூக வலைதளம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் அதை கவனிக்க மேலாளர் ஒருவரை நியமிக்கவும் அத்துடன் தரவு பகுப்பாய்வாளரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.