விளையாட்டு

லலித் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்: மும்பை நீதிமன்றம் அதிரடி

பிடிஐ

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது உத்தரவை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நிதி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினர் அனுப்பிய சம்மன்களை மதித்து ஆஜராகததால் லலித் மோடிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் இந்தக் கைது உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் ஹிடென் வென்கோன்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2010-ல் ஐபிஎல் தலைவராக இருந்த போது லலித் மோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி கடந்த ஜூலை 3-ல் அமலாக்கப் பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த சம்மனை லலித் மோடி ஏற்று நடக்காததையடுத்து அவர் மீது நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு அமலாக்கப் பிரிவு கடந்த 27-ம் தேதி நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் லலித் மோடிக்கு பிணையில் வெளிவர முடியாத பிரிவில் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

லலித் மோடி விசா பெற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவியதாக எழுந்த சர்ச்சையால் நாடாளுமன்றம் முடங்கிவரும் சூழலில் லலித் மோடிக்கு பிணையில் வர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT