படுதோல்விகளினால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கே கிளார்க் குறித்து முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹெய்டன் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடும் விமர்சனங்களை வைத்தனர்.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் மேத்யூ ஹெய்டன், கிளார்க் அறிமுகமான புதிதில் நடந்து கொண்ட விதம் பற்றி குறிப்பிடும் போது, “என்னால் அந்த தினத்தை மறக்க முடியாது. பேட்ஸ்மெனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் ஒரு போட்டியின் போது ஜஸ்டின் லாங்கரால் நிற்க முடியவில்லை. காரணம் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது.
அப்போது அந்த இடத்தில் நிற்க யாராவது ஒருவர் தேவை, பொதுவாக அணியில் இருக்கும் இளம் வீரரைத்தான் அழைப்போம். அப்போது கிளார்க் என்ன கூறினார் தெரியுமா? என்னால் மறக்க முடியாது. “அந்த இடத்தில் நின்றுதான் ஆகவேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவதையே விட்டு விடுகிறேன், அதாவது பேகி கிரீன் தொப்பியை திருப்பித் தரவும் தயார்” என்றார்.
கிளார்க் மற்ற பீல்டிங் இடங்களில் நல்ல பீட்லர்தான். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும் போது ஒன்று புரிகிறது, நாங்கள் அப்போதே அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும், 'நீ என்ன நினைக்கிறாயோ அதுதான் நடக்கும், உன்னிடமிருந்து பேகி கிரீன் தொப்பியைப் பறிக்க வேண்டும்' என்று நாங்கள் கூறியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் பாடம் கற்றுக் கொண்டார், நல்ல நபாராகவும் நல்ல வீரராகவும் உருவானார்” என்றார் மேத்யூ ஹெய்டன்
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறுகையில், “அவர் (கிளார்க்) அணியில் வீரர்களை பிரித்தாளுபவர், அணி என்பது சமூகத்தின் ஒரு பிரதிபலிப்புதான், மைக்கேல் கிளார்க் எப்பவுமே கண்டிப்பான சில கருத்துக்களை வைத்திருப்பவர், அப்படிப்பட்டவர் இளம் வயதினராக இருக்கும் போது பிரித்தாளும் நோக்கமே முதன்மை பெறும்.
அவருடைய கருத்துக்கள் பிறரை உரசிப்பார்க்கும் தன்மை கொண்டது, என்னையும் நிறைய முறை உரசியுள்ளார்.
கடந்த கேப்டன்கள் போல் இவர் இயல்பான கேப்டன் அல்ல. ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங்குக்குப் பிறகு கேப்டனாக இருப்பது சுலபமான விஷயம்தான். ஆனால் எது எப்படியோ இனிமேல் அவரது கேப்டன்ஸி ஸ்டைல் பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாகும் என்பது உறுதி” என்றார்.