காலநிலை மாற்றம் கிரிக்கெட்டையும் விட்டு வைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில், வீசும் அனல் காற்று ஆகியவற்றால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து வீரர்கள் திணறி வருகின்றனர்
உலக நாடுகள் அனைத்துக்கும் காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தொழில்மயமாக்கத்துக்கு முன் இருந்த சூழலோடு ஒப்பிடுகையில் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி உயர்ந்துவரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. கடல்மட்டமும் உயர்ந்து வருகின்றன. இதனால் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க ஐ.நா. உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது
இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கம் தற்போது மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் உணர முடிகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்தநாள் நடக்கும் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது
ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலமாகும். இதனால் அங்கு கொளுத்தும் வெயிலாலும், வீசும் அனல்காற்றாலும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விளையாடும் வீரர்களும் பெரும் அவஸ்தைப்படுகின்றனர்
மெல்போர்னில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகம் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த ஆய்வு குறித்து ஏபிசி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், " மெல்போர்னில் வீசிவரும் கடும் வெப்பம், அனல்காற்றையும் பொருட்படுத்தாமல், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. டிசம்பர் இறுதி நாட்களில் ஆஸ்திரேலிய மக்கள் கடுமையான வெப்பத்தை உணர்ந்து வருகின்றனர்.
எந்தவிதமான நடவடிக்கையும் காலநிலை மாற்றத்துக்கு எடுக்காததன் விளைவை கிரிக்கெட் வீரர்கள் சந்தித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நவம்பர் மாதத்துக்கோ அல்லது மார்ச் மாதத்துக்கோ மாற்றி அமைக்கப்படலாம்" எனத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசும், கிரிக்கெட் வாரியமும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய காலநிலை பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் இதேபோன்று சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, வெயில் 42 டிகிரி கொளுத்தியது.இ தனால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மயங்கி மைதானத்தில் விழுந்து அதன்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதத்தில் 35 டிகிரி செல்சியஸுக்கு மேலாகவே வெப்பம் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.