மெல்போர்னில் நடைபெறும் ஆஸி.-நியூஸி. 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 467 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூஸிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் சவுதி 3 விக்கெட்டுகளையும் கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னருக்கு சாத்துமுறை வழங்கப்பட்டது, அவர் 20 ஓவர்களி 82 ரன்கள் விக்கெட் இல்லை. நியூஸிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று 257/4 என்று ஆஸ்திரேலியா தொடங்கிய போது ஸ்மித் 77 ரன்களுடனும், ஹெட் 25 ரன்களுடனும் இருந்தனர். ஆனால் இன்று ஸ்மித் சதத்தை எதிர்நோக்கி வந்த ரசிகர்களுக்கு நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஏமாற்றமளித்தார். காரணம் ஸ்மித் விக்கெட்டை 85 ரன்களில் வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
அதுவும் அவுட் ஆன விதம் சாதாரணமல்ல. பொறிவைத்து திட்டமிட்டு வீழ்த்தப்பட்டார், அதுவும் இந்தத் தொடரில் 3வது முறையாக அவர் வாக்னரின் ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையாகியுள்ளார். இடது கை ஓவர் த விக்கெட்டில் வாக்னர் வீசிய பந்து ஷார்ட் ஆஃப் லெந்தில் பிட்ச் ஆகி எகிறியது கிட்டத்தட்ட ஸ்மித்தின் கழுத்துயரம் வந்த பந்தை அவர் மட்டையை தன் உடலுக்குப் பாதுகாப்பாகத்தான் வைத்தார் கிளவ்வில் பட்ட பந்து கல்லியில் கேட்ச் ஆனது. அதை நிகோலஸ் அருமையாகப் பிடித்தார்.
284/5 என்ற நிலையில் ஆஸ்திரேலியாவை 350 ரன்களுக்குள் மடித்திருக்க வேண்டும், ஆனால் வாக்னர் அளவுக்கு எதிர்முனையில் பந்து வீச்சில் தாக்கம் இல்லை. இதனால் டிம் பெய்ன் கொஞ்சம் விறுவிறுவென ரன்களைச் சேர்த்து 72 பந்துகளில் அரைசதம் கண்டார். கொஞ்சம் கொஞ்சமாக ஓஞ்சுப் போன பந்து வீச்சாக மாற டிம் பெய்ன் புல் ஷாட், ட்ரைவ் என்று அசத்தி 138 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் சதக் கனவு அவரைச் சூழும்போது ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய வாக்னர் பந்தை உள்ளே செல்த்த முழங்காலில் வாங்கினார் பெய்ன், களநடுவர் நாட் அவுட் என்றார், வில்லியன்சன் ரிவியூ செய்து அவுட் வாங்கினார்,
இவரும் ட்ராவிஸ் ஹெட்டும் இணைந்து 150 ரன்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், ட்ராவிஸ் ஹெட் கொஞ்சம் போராடித்தான் சதம் எடுக்க முடிந்தது அதுவும் 90 ரன்களிலிருந்து 98 வரும் வரை 45 நிமிடங்கள் ஆனது, பிறகு தேநீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியவுடன் தான் சதம் அடித்தார், ஹெட்டின் 2வது டெஸ்ட் சதமாகும் இது. 114 ரன்கள் எடுத்த ட்ராவிஸ் ஹெட், வாக்னரின் தாழ்வான புல்டாஸில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு ஆஸ்திரேலியா 467 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க், கமின்ஸ், நேதன் லயன் ஆகியோரை சவுதி வீழ்த்தினார்.