சென்சூரியன் மைதானத்தில் முழு ‘கிரீன் டாப்’ பிட்சில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததற்கு பலனாக 5 மாதங்களுக்குப் பிறகு பந்து வீச வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் தன் முதல் ஓவர் முதல் பந்திலேயே டீன் எல்கர் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான உலக சாதனையை தன் வசம் வைத்துள்ள வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனின் 150வது டெஸ்ட் போட்டியாகும் இது.
பிட்சில் நல்ல அடர்த்தியான புற்கள் இருந்தன, அதனால் ஜோ ரூட் டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்தை டீன் எல்கர் எதிர்கொண்டார், மிகப்பிரமாதமான டெஸ்ட் வீரர், தென் ஆப்பிரிக்க அணியின் புதிய சுவர். ஆனால் ஆண்டர்சன் 5 மாதங்களுக்குப் பிறகு வீசிய ஒன்றுமில்லாத லெக் திசை லாலி பாப் பந்தை, எளிதில் பவுண்டரிக்கு விரட்டிவிடக்கூடிய பந்தை அல்லது ஆடாமல் விட முடிவெடுக்கக் கூடிய பந்தை லெக் திசையில் பிளிக் செய்கிறேன் பேர்வழி என்று ஆட பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனது.
தென் ஆப்பிரிக்காவில் இதற்கு முன்பாக நினைவில் உள்ளவரை கபில்தேவ் 1991 தொடரில் தொடரின் முதல் பந்திலேயே தென் ஆப்பிரிக்க வீரர் குக் என்பவரை வீழ்த்தினார். இப்போது ஆண்டர்சன் தொடரின் முதல் பந்திலேயே டீன் எல்கரை வீழ்த்தினார், எல்கர் டக் அவுட்.
இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், ஆண்டர்சன், பிராட், பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் என்று வேகப்பந்து கூட்டணி இருந்தும் கீரின் டாப் பிட்சைப் போட்டு ஆடுகிறது தென் ஆப்பிரிக்கா, இதுதான் தைரியம் என்பது. எதிரணிக்கும் சாதகமாக இருக்கும் பிட்சை அமைத்து சவாலை எதிர்கொள்வதுதான் டெஸ்ட் கிரிக்கெட். குழிப்பிட்சைப் போட்டு விட்டு சாதனைகளை சுயத்தம்பட்டம் அடித்துக் கொள்வதல்ல.
இங்கிலாந்து அணி: ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லி, ஜோ டென்லி, ஜோ ரூட், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, பட்லர், சாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆண்டர்சன், பிராட்.
தென் ஆப்பிரிக்க அணி: டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், ஜுபைர் ஹம்சா, டுபிளெசிஸ், வான் டெர் டூசன், டிகாக், பிரிடோரியஸ், பிலாண்டர், மஹராஜ், ரபாடா, நோர்ட்யே