கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த இந்திய அணித் தேர்வுக்குழுவில் உள்ள தேவங் காந்தி பெங்கால் ஓய்வறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பெங்கால்-ஆந்திரா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் 2ம் நாளான இன்று (வியாழன், 26, டிச) இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர் தேவங் காந்தி பெங்கால் வீரர்கள் ஓய்வறையில் நுழைந்தார், ஆனால் அவரைத் தடையை மீறி நுழைந்ததாகக் கூறி பிசிசிஐ ஊழல் தடுப்பு அதிகாரி சுமன் கர்மாகர் வெளியேற்றினார்.
தேவங் காந்தி ஓய்வறையில் இருந்ததையடுத்து பெங்கால் வீரர்கள் மற்றும் முன்னாள் கேப்டன் மனோஜ் திவாரி உட்பட ஊழல் தடுப்பு நடைமுறை குறித்து கேள்வி எழுப்பி தேவங் காந்தி எப்படி அனுமதிக்கப்பட்டார் என்று கேட்டனர்.
விதிமுறைகளின் படி போட்டிக்குத் தேர்வான வீரர்கள், உதவிப் பணியாளர் தவிர ஓய்வறையில் யாரும் இருக்கக் கூடாது.
”நாம் நடைமுறை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும், தேசிய அணித்தேர்வாளருக்கு ஓய்வறையில் வேலையில்லை. இவர் அனுமதியின்றி உள்ளே வரக்கூடாது” என்று மனோஜ் திவாரி தெரிவித்தார்.
வெளியேற்றப்பட்ட தேவங் காந்தி முன்னாள் இந்திய வீரர், முன்னாள் பெங்கால் கேப்டன் மற்றும் இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர் ஆவார்.