புதனன்று குஜராத்-கேரளா அணிகளுக்கு இடையே தொடங்கிய ரஞ்சி டிராபி போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஆடி தன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர் இந்தப் போட்டியில் ஆடவில்லை.
ஸ்ட்ரெஸ் பிராக்சர் காரணமாக அவர் தன் உடற்தகுதியை ரஞ்சி போட்டியில் ஆடி நிரூபிக்க வேண்டியிருந்தது. இதுதான் எல்லா வீரர்களுக்குமான நடைமுறை. ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, பும்ராவிடம் குஜராத் ரஞ்சி டிராபி போட்டியில் ஆட வேண்டாம், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு கூறியதாக பிசிசிஐ- அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முறையே டி20 மற்றும் ஒருநாள் தொடர் அணிகளில் பும்ரா தேர்வு செய்யப்பட்டதையடுத்து கங்குலி, பும்ராவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பும்ரா சமீபத்தில் முடிந்த மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2வது போட்டியின் போது விசாகப்பட்டிணத்தில் இந்திய அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணியின் பயிற்றுனர் மற்றும் பிசியோ பும்ராவுக்கு கிரீன் சிக்னல் அளித்தனர்.
ஆஸ்திரேலியா தொடருக்குத்தான் பும்ரா வருவார் என்ற நிலையில் இலங்கைக்கு எதிராகவே பும்ராவை ஆட வைக்கும் முயற்சியில் ரஞ்சி டிராபி ஆடி உடற்தகுதியை நிரூபிக்கும் வழக்கமான நடைமுறை புறந்தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக ஜனவரி 5ம் தேதி முதல் டி20 நடைபெறுகிறது.