‘ஏ’ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு கிரிக் கெட் தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 48.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரீஸா ஹென்ரிக்ஸ் 43, டீன் எல்கர் 28 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் கோல்ட்டர் நீல் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் பட்டின்சன், பாய்ஸ், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சிறப்பான தொடக்கம்
பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் உஸ்மான் கவாஜா-ஜோ பர்ன்ஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.2 ஓவர்களில் 142 ரன்கள் சேர்த்தது. உஸ்மான் கவாஜா 82 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் வில்ஜோன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
இதையடுத்து களம் கண்ட டிராவிஸ் ஹெட், அதிரடியாக ஆட, 31 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. ஜோ பர்ன்ஸ் 91 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63, டிராவிஸ் ஹெட் 20 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்ட ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.