விளையாட்டு

ராகுல் திராவிட் திருப்பி அனுப்பினாரா? இல்லை...பும்ரா விவகாரத்தில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்சிஏ) உடல்தகுதித் தேர்வு செய்யாததால் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை என்சிஏ தலைவர் திராவிட் திருப்பி அனுப்பினார் என்று செய்திகள் எழுந்தன, ஆனால் இந்த விவகாரத்தில் அதையும் தாண்டி ஏகப்பட்ட படிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ராகுல் திராவிட் இவ்வாறு செய்தது பற்றிய கேள்விக்கு, இந்திய அணிக்குள் தேர்வாகும் ஒவ்வொரு வீரரும் என்சிஏவில் உடல்தகுதிசான்று பெற்றுத்தான் அணிக்குள் வர வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துவிட்டார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

என்சிஏ அமைப்பில் பயிற்சி பெற ஆர்வமில்லாமல் விசாகப்பட்டிணத்தில் இந்திய அணியோடு பயிற்சியில் பும்ரா ஈடுபட்டுள்ளார்.

பும்ராவின் இந்த செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்த ராகுல் திராவிட், உடல் தகுதித்தேர்வு நடத்த முடியாது என்று கூறி பும்ராவை திருப்பி அனுப்பினார் என்று செய்திகள் நேற்று வலம் வந்தன.

ஆனால் என்.சி.ஏ.வில் பும்ராவுக்கு உடற்சோதனை நடத்துவதில் திராவிடுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் இதில் வேறு சில விஷயங்கள் அடங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு நெருக்கமான ஒருவர் ஊடகன் ஒன்றிடம் தெரிவிக்கும் போது, “பும்ராவை எந்த ஒரு கட்டத்திலும் என்.சி.ஏ. மறுக்கவில்லை. நாங்கள் கூறியதெல்லாம் 4 மாதங்களாக வேறு ஒருவரிடம் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவர்தான் உங்கள் உடல் தகுதியை நன்றாக அறிந்திருப்பார், இந்நிலையில் நாங்கள் டெஸ்ட் நடத்தி உங்களுக்கு சான்றிதழ் எப்படி அளிக்க முடியும்" என்றார்.

என்.சி.ஏ. வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பும்ராவுக்கு சலுகைதான் வழங்கினோம்.,யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொண்டு வந்து டெஸ்ட்களை என்.சி.ஏ.வில் நடத்துங்கள் என்றுதான் கூறினோம். ஆனால் கடைசி நிமிடத்தில் வந்து எனக்கு டெஸ்ட் எடு, உடற்தகுதி சான்றிதழ் கொடு என்றால் நாங்கள் எப்படி கொடுக்க முடியும்?

பும்ராவின் காயம் பற்றி இங்குள்ள என்.சி.ஏ. ட்ரெய்னர்களுக்கு எந்த ஒரு விவரத்தையும் அவர் அளிக்கவில்லை. பும்ராவுடன் என்.சி.ஏ ட்ரெய்னர்கள் ஒருநாள் கூட பயிற்றுவிப்பில் ஈடுபடவில்லை. இவர்கள் அவருக்கு 4 மாதங்களாக சிகிச்சை அளிக்கவில்லை. இப்படியிருக்கும் போது அவரை டெஸ்ட் செய்து எப்படி நாங்கள் சான்றிதழ் வழங்க முடியும்?” என்றார்.

இவர் இப்படிக் கூறுவதற்குக் காரணமென்னவெனில் ஒரு வீரரை ஃபிட் என்று அவர்கள் கூறிவிடுகின்றனர், ஆனால் அவர் உடனேயே காயமடைந்தால் என்.சி.ஏ. பலிகடாவாக்கப்படுகிறது. அகாடமி மீது குறை கூறப்படுகிறது.

“எந்த ஒரு வீரரும் எங்கு வேண்டுமானாலும் சென்று டெஸ்ட் கொள்ளுங்கள் ஆனால் இங்கு வந்து டெஸ்ட் நடத்தி உடற்தகுதி சான்றிதழ் கோராதீர்கள். ஏனெனில் ஏதேனும் தவறாக நிகழ்ந்தால் என்.சி.ஏ.வைத்தான் குற்றம்சாட்டுகின்றனர். எந்த தொழில்பூர்வ அமைப்பும் இதற்கு செவிசாய்க்க மாட்டார்கள்” என்கிறது என்.சி.ஏ தரப்பு. திராவிட் இந்திய அணியின் உடற்கோப்பு மருத்துவரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார என்கிறது என்.சி.ஏ.தரப்பு.

ஆகவே இதிலிருந்து நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் காயம் என்பது இயற்கையானதல்ல அதைச் சுற்றியும் ‘அரசியல்’ நிலவுகிறது என்பதே. என்.சி.ஏ. குறைகூறப்படுகிறது, சில வேளைகளில் வீரர்கள் உள்ளிட்டோரால் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதும் தெரிகிறது.

-தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்

SCROLL FOR NEXT