2019-ல் ஒருநாள் போட்டிகளில் அதிகமான ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் 2வது இடத்தில் இருக்கும் உஸ்மான் கவாஜா இந்தியாவுக்கு வந்து ஆடும் ஆஸி. ஒருநாள் தொடர் அணியிலிருந்து நீக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடரிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக, நைஸாக கவாஜா ஓரம்கட்டப்பட்டு வந்தார். ஆனால் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறிப்பாக இந்த ஆண்டில் 1085 ரன்களை 49.31 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதன் மூலம் மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் 6வது இடத்தில் உள்ளார். இதை விட என்ன வேண்டும்? ஆனால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது யாருக்குமே அதிர்ச்சியாகவே இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கவாஜாவை ‘ஆஸ்திரேலிய அணி மனநிலை அல்லாத வீரர்’ என்ற உணர்வுடனேயே அணியில் சேர்த்து வந்துள்ளனர், என்பது இதிலிருந்து தெரிகிறது.
உஸ்மான் கவாஜா இது தொடர்பாகக் கூறிய போது,
“நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நீக்கப்படுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ட்ராப் செய்யும் போதெல்லாம் ஆம் அதற்கான வாய்ப்பு உண்டு என்று பட்சி சொல்லிவிடும். ஆஷஸ் தொடரில் அப்படித்தான் பட்சி சொன்னது நான் நீக்கப்பட்டேன். அதாவது வருமுன் நமக்கு ஓரளவுக்கு தெரிந்து விடும்.
ஆனால் இம்முறை நீக்கப்படுவது குறித்த முன் உணர்வு எனக்கு ஏற்படவில்லை, அதனால் அதிர்ச்சியடைந்தேன். நான் அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூற முடியாது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் நான் அதிக ரன்களை எடுக்கும் வீரர்களில் ஒருவன். நிறைய ரன்களை எடுத்தேன் மீண்டும் ஆஸிக்குத் திரும்பிய போதும் நல்ல ரன்களை எடுத்தேன்.
ஆகவே அவர்கள் என்னை நோக்கி அதிகம் எதுவும் பேச முடியாது, எனக்கும் அவர்களிடத்தில் அதிகம் பேச எதுவும் இல்லை.
எது எப்படியோ எனக்கு ஏமாற்றமாக உள்ளது. இப்போதைக்கு பிக்பாஷ் மீது கவனம்.” என்றார் கவாஜா.