விளையாட்டு

இமாச்சல் பிரதேசத்திடம் தமிழக அணி தோல்வி

செய்திப்பிரிவு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் இமாச்சல் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி தோல்வியடைந்தது.

திண்டுக்கலில் உள்ள நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இமாச்சல் பிரதேசம் 158 ரன்களும், தமிழகம் 96 ரன்களும் எடுத்தன. 62 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இமாச்சல் பிரதேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 52.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷி தவண் 35, சுமித் வர்மா 36 ரன்கள் எடுத்தனர்.

தமிழக அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4, டி.நடராஜன் 2, ஷாய் கிஷோர் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 217 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 67.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கருணாகரன் முகுந்த் 48, பாபா அபராஜித் 43, கங்கா தர் ராஜூ 21 ரன்கள் சேர்த்தனர்.

அபிநவ் முகுந்த் 0, ஷாய் கிஷோர் 4, என்.ஜெகதீசன் 0, கவுசிக் 14, ஷாருக்கான் 1, ரவிச்சந்திரன் அஸ்வின் 4, விக்னேஷ் 1, நடராஜன் 0 ரன்களில் நடையை கட்டினர். இமாச்சல் பிரதேச அணி சார்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆகாஷ் வசிஷ்ட் 7 விக்கெட்களை வேட்டையாடினார்.

71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இமாச்சல் பிரதேச அணி 6 புள்ளிகளை பெற்றது. ஆட்ட நாயகனாக ஆகாஷ் வசிஷ்ட் தேர்வானார். தமிழக அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதே மைதானத்தில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் கர்நடாகாவிடம் வீழ்ந்திருந்தது.

SCROLL FOR NEXT