கொல்கத்தாவில் நடந்துவரும் 2020 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலத்தில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.
அதேபோல 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி வீரர்கள் பிரியம் கார்க், விராட் சிங் ஆகியோரை சன் ரைசர்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்ற வீரர் ஜெய்ஸ்வால்.இவருக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. ஏலம் தொடங்கியதும் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் போட்டியிட்டு ரூ.80 லட்சத்துக்கு கொண்டு சென்றன. ஆனால் விடாமல் துரத்திய கொல்கத்தா அணி ரூ.1.90 கோடிக்கு ஜெய்ஸ்வாலை ஏலம் கேட்டது.
ஆனால் இறுதியாக ராஜஸ்தான் அணி ரூ.2.4 கோடிக்கு ஜெய்ஸ்வாலை விலைக்கு வாங்கியது. பானிபூரி விற்று, சாதாரண டென்ட் குடிசையில் வாழ்ந்து, கிரிக்கெட் விளையாடிப் பழகியவர் ஜெய்ஸ்வால், அவரை இந்த ஏலத்தின்மூலம் கோடீஸ்வரராக்கியுள்ளது ராஜஸ்தான் அணி.
19வயதுக்குட்டோருக்கான இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வால்
தமிழகத்தின் மாயஜால சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அடிப்படை விலையாக ரூ.30 லட்சத்துக்கு நுழைந்தார். ஆனால், கேகேஆர் அணி அவரை வாங்குவதற்கு தீவிரமாக இருந்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கு வருண்கார்த்திக்கின் திறமை மீது நம்பிக்கை இருந்ததால், அவரை இழக்க விரும்பவில்லை.
ஆனால், ஆர்சிபி அணி ரூ.1.4 கோடிக்கு கேட்க, வருண் சக்ரவரத்தியை ரூ.2 கோடிக்கு கேட்டது கொல்கத்தா அணி. ஆனால், ஆர்சிபி அணி ஏலத்தில் முன்னேற, கொல்கத்தா அணி இறுதியாக ரூ.4 கோடிக்கு வருண் சக்ரவர்த்தியை விலைக்கு வாங்கிச் சென்றது
19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க், அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் விராட் சிங் இருவரையும் தலா ரூ.1.90 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விலைக்கு வாங்கியது.
அதிரடி பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதியை ரூ.60 லட்சத்துக்கு கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியது.