கொல்கத்தாவில் இன்று பிற்பகலில் 2020 சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிக்காந ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில் 5 முக்கிய ஆல்ரவுண்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
13-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. மொத்தம் 73 வீரர்களுக்கான ஏலத்தில் 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர். 8 அணிகளும் அணிகளின் நிர்வாகிகளும், தங்கள் அணியை மெருகேற்றும் வீரர்களைத் தேர்வு செய்ய ஆவலுடன் தயாராகி உள்ளனர்.
இந்த ஏலத்தில் 5 ஆல்ரவுண்டர்கள் அனைத்து அணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள். இந்த ஆல்ரவுண்டர்கள் அணியில் இடம் பெறும்போது போட்டியின் தன்மையை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் தன்மை பெற்றவர்கள்.
கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் கடந்த சில மாதங்களாக மனநலம், உடல்நலம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட மேக்ஸ்வெல் இதுவரை 69 ஐபிஎல் போட்டிகளில் 1397 ரன்கள் சேர்த்துள்ளார். பகுதிநேர பந்துவீச்சாளர், அதிரடி ஆட்டக்காரர், சிறந்த பீல்டராக இருக்கும் மேக்ஸ்வெலுக்கு அதிகமான போட்டி இருக்கும்.
கிறிஸ் மோரிஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கிறிஸ் மோரிஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடியதாகக் கூறிய அவரை விடுவித்தது. பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ், டெத் ஓவர்கள் வீசுவதில் திறமையானவர் என்பதால் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிகமாகக் கவனிக்கப்படுகிறார். இதுவரை 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் மோரிஸ் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜிம்மி நீஷம்
நியூஸிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றவர். ஆனால், சிறப்பாக விளையாடாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின், உலகக்கோப்பைப் போட்டியில் சிறப்பாக பங்காற்றி, நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிவரை தகுதிபெற நீஷம் முக்கியக் காரணமாக அமைந்தார். சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் நீஷமிற்கு ரூ.50 லட்சம் அடிப்படை விலை வைக்கப்பட்டுள்ளது.
அன்டில் பெகுலுக்வாயே
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் அன்டில் பெகுலுக்வாயே இதுவரை எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடதவர். ஆனால் உள்நாட்டுப் போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்க அணியிலும் இவரின் பேட்டிங்கும், பந்துவீச்சும் ஈர்க்கப்பட்டுள்ளதால், இந்த முறை ஐபிஎல் போட்டியிலும் பெகுலுக்வாயேவுக்கு அதிகமான போட்டி இருக்கும்.
கிறிஸ் வோக்ஸ்
உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தவர் கிறிஸ் வோக்ஸ். புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர், டெத் ஓவரை துல்லியமாக வீசக்கூடியவர் என்பதால், இவரைத் தேர்வு செய்ய அதிகமான ஆர்வம் காட்டுவார்கள்.