விசாகப்பட்டிணத்தில நடந்து வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 159 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
விசாகப்பட்டிணத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்பதால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுலும், ரோஹித் சர்மாவும் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தில் இறங்கினர்.
கடந்த போட்டியில் சிறப்பாக ஆடாத ரோஹித் சர்மா 67 பந்துகளில் அரைசதத்தையும், 105 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இவருக்குத் துணையாக ஆடிய கே.எல்.ராகுலும் சதம் அடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுலுக்கு இது 3-வது சதமாகும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 227 ரன்கள் சேர்த்தனர்.
ரோஹித் சர்மாவுக்கு இந்த சதம் அவரின் ஒருநாள் அரங்கில் 28-வது சதமாக அமைந்தது. ரோஹித் சர்மா 138 பந்துகளில்159 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடங்கும்.
2019-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா அடிக்கும் 7-வது சதமாகும். இதன் மூலம் ஒரு ஆண்டில் 7சதங்கள் அடித்த டேவிட் வார்னர், கங்குலி ஆகியோரோடு ரோஹித் சர்மாவும் இணைந்தார்.
2000ம் ஆண்டில் கங்குலி 7 சதங்களும், 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 7 சதங்களும் அடித்திருந்தனர்.
ஆனால், ஒரு ஆண்டில் அதிகமான சதங்கள் அடித்தவகையில் சச்சின் 1998-ம் ஆண்டு 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
கேப்டன் விராட் கோலி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். பொலார்ட் வீசிய 38 ஓவரில் 3பந்தை எதிர்கொண்ட விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷார்ட் மிட் விக்கெட்டில் சேஸிட் கேட் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி அரிதினும் அரிதாக டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். கோலியின் 11-ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இது அவருக்கு 13-வது டக்அவுட்டாகும்.