இந்திய அணியின் வெற்றியை வெகுவாகப் பாராட்டிய சுனில் கவாஸ்கர், அடுத்த போட்டியில் முரளி விஜய்க்குப் பதில் புஜாராவும், ஸ்டூவர்ட் பின்னிக்குப் பதில் புவனேஷ் குமாரும் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
இந்திய வெற்றி குறித்து தனியார் தொலைக்காட்சியில் கவாஸ்கர் கூறும்போது, “இந்திய அணியினர் எவ்வளவு உறுதியுடன் ஆடினர் என்பதை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்வதிலும் இவர்களது உறுதிப்பாடு தெரிகிறது. இந்த போட்டியில் இவர்கள் ஆடிய விதம், அணியாகத் திரண்டது... இது உண்மையில் அணியின் ஒருமித்த ஆட்டத்துக்கு கிடைத்த வெற்றி. வெற்றியில் எப்போதும் மற்ற சிலரை விட ஓரிருவர் சிறப்பாக ஆடுவது வழக்கம். இதுதான் முக்கியம், இந்திய அணியை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் உறுதி என்பதே இது.
துணைக் கண்டத்துக்கு வெளியே உண்மையான சவால் காத்திருக்கிறது, ஆனால் இவர்கள் அதற்காக தங்களை தற்போது வடிவமைத்துக் கொள்வது நிச்சயம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் அணி சமபலத்துடன் உள்ளது. நல்ல பேட்டிங், பந்து வீச்சில் கட்டுக் கோப்பு, பீல்டிங் பிரமாதம். அருகில் கேட்ச் பிடிக்கும் திறமை அபாரம்.
எனவே எதிர்காலத்தில் இந்த இந்திய அணி பிரமாதமாக விளையாடும் என்று அனைவர் மனதிலும் நம்பிக்கை ஏற்படுகிறது.
எப்படி ஒரு பேட்ஸ்மென் சதம் அடித்து தன் கணக்கில் சேர்ப்பதை விரும்புவார்களோ, அப்படித்தான் கேப்டனுக்கும் டெஸ்ட் வெற்றி என்பது முக்கியம். விராட் கோலிக்கு அதுதான் இன்று கிடைத்தது. அவரது தலைமையின் கீழ் பெறப்போகும் பல வெற்றிகளுக்கு இந்த வெற்றியே அச்சாரம்.
விஜய்யின் காயம் துரதிர்ஷ்டவசமானது, ஏனெனில் அவர் மிகவும் நன்றாக பேட் செய்தார். அவர்தான் இலங்கை பந்து வீச்சை அடிக்கத் தொடங்கினார், இதனால்தான் ரஹானே சுதந்திரமாக ஆட முடிந்தது. எனவே விஜய் காயம் இந்தியாவுக்கு ஒரு பெரிய அடிதான். ஆனால், செடேஸ்வர் புஜாராவும் பெரிய அளவில் ரன்களை எடுப்பவர்தான். அவரும் இந்திய அணிக்குள் வருவதை எதிர்பார்க்கிறார்.
அடுத்த டெஸ்ட் போட்டியில் பிட்ச் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து அணி அமையும். பெரிய மாற்றங்கள் இருக்காது, ஸ்டூவர்ட் பின்னிக்கு பதிலாக புவனேஷ் குமார் இடம்பெறலாம் அவ்வளவே” இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.
ராகுல் கீப்பிங் செய்வது பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது, எனவே ராகுல், புஜாரா தொடங்க, ரஹானே, கோலி, ரோஹித் சர்மா என்று தொடர அதன் பிறகு பின்னி, புவனேஷ் குமார், அஸ்வின், இசாந்த் சர்மா, உமேஷ், அமித் மிஸ்ரா என்று அணி அமைய வாய்ப்பிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.