வியாழனனன்று (டிச.19) கொல்கத்தாவில் 73 வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலத்தில் 332 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் ஆர்சிபி அணி தனக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக ஏலத்தில் செயல்படும் என்று விராட் கோலி வீடியோ பதிவு ஒன்றில் பேசியுள்ளார்.
கடந்த 3 ஆண்டு ஐபிஎல் தொடர்களில் கோலி தலைமை ஆர்சிபி அணி உதை மேல் உதை வாங்கி கிட்டத்தட்ட ரசிகர்கள் ஆதரவு இனி கிடைக்குமா என்று தோன்றிய நிலையில் ரசிகர்களின் ஆதரவைக் கோரியுள்ளார் கேப்டன் விராட் கோலி.
ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் கோலி பேசியதாவது:
அணியைக் கட்டமைப்பது பற்றி நாங்கள் கலந்தாலோசனை செய்துள்ளோம். வலுவான அணியை கட்டமைத்து 2020 ஐபிஎல் சீசனில் நன்றாக ஆடத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்வோம்.
ஆகவே ரசிகர்களான ஆதரவு எப்போதும் எங்களுக்குத் தேவை, உங்கள் ஆதரவுதான் அணிக்கு விலைமதிப்பில்லாதது. ஆகவே நன்றி. டிச.19 ஏலத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
வரும் ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நடைபெறுகிறது, அணியின் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நிர்வாகக் குழுவின் மைக் ஹெசன், சைமன் கேடிச் பிரமாதமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார் விராட் கோலி.