விளையாட்டு

அதிக விலைக்கு யார் ஏலம் எடுக்கப்படுவார்கள்?-  ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவும் 5 அயல்நாட்டு வீரர்கள்

செய்திப்பிரிவு

டிசம்பர் 19ம் தேதியன்று ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. சுமார் 332 வீரர்களில் அணிகளுக்கு ஏலம் எடுக்கப்படும் 73 வீரர்கள் யார் யார் என்பது அன்று தெரிந்து விடும்.

ரூ.2 கோடி அதிகபட்ச அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பாட் கமின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேல் ஸ்டெய்ன், அஞ்சேலோ மேத்யூஸ் அதிகபட்ச அடிப்படை விலையில் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்போர்ட்ஸ்டார் கணிப்பின் படி கடும் போட்டி நிலவும் அயல்நாட்டு வீரர்கள் 5 பேர் இதோ:

‘சல்யூட்’ புகழ் ஷெல்டன் காட்ரெல்:

30 வயதாகும் மே.இ.தீவுகள் வீரர் ஷெல்டன் காட்ரெல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் தாமதமாகவே வந்தார். ஆனாலும் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ஆடிவருகிறார் ஷெல்டன் காட்ரெல். வீரர்களை அவுட் ஆக்கிய பிறகு அவர் அடிக்கும் சல்யூட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதால் இவர் ரசிகர்களை மைதானத்திற்கு ஈர்ப்பதில் புதிய ஒரு வீரராகத் திகழ்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல் உரிமையாளர்களிடம் தனி வரவேற்பு இருக்கும், ஜெயதேவ் உனாட்கட் அவ்வளவு பெரிய ஏலத்திற்கு தகுதியுடைய பெரிய வீச்சாளர் இல்லை என்றாலும் அவருக்குக் கொட்டிக் கொடுத்தனர், ஆகவே இம்முறை காட்ரெலுக்கு தனி கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாம் பேன்ட்டன்:

இந்த இங்கிலாந்து வீரர் அதிகம் அறியப்படாதவர், ஆனால் டி20 கிரிக்கெட்டில் கலக்கி வருபவர். இங்கிலாந்து கவுண்டி அணியான சோமர்செட் அணிக்கு ஆடும் இவர் 549 ரன்களை 161.47 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். வைட்டாலிடி பிளாஸ்ட் டி20 தொடரில் இவர் 67 பவுண்டரி 23 சிக்சர்களை விளாசியது தொடரிலேயே அதிகம்.

3. பாட்கமின்ஸ்:

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் காயத்திலிருந்து மீண்டு வந்து பிரமாதமாக வீசி வரும் ஒரு அற்புத வேகப்பந்து வீச்சாளராவார். கடந்த 2017 ஐபிஎல் போட்டித்தொடரில் டெல்லி அணிக்காக 15 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

4. கிளென் மேக்ஸ்வெல்:

இவர் தற்போது மன உளைச்சல், அழுத்தம் காரணமாக ஓய்வில் இருக்கிறார், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவார். இவரது மனநிலை காரணமாக அதிக தொகைக்கு ஏலம் போவாரா என்பது தெரியவில்லை. ஆனால் தகவல்களின் படி இவருக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றே தெரிகிறது. 2014 சீசனில் 16 மேட்ச்களில் 556 ரன்களை குவித்து கிங்ஸ் லெவன் அணியை இறுதிப்போட்டி வரை இட்டுச் சென்றார். 36 சிக்சர்களை இந்தத் தொடரில் அடித்திருந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 154 என்பது உரிமையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாகும்.

5. கிறிஸ் லின்:

இவர் தொடக்க வீரர், கொல்கத்தா அணிக்கு பல அதிரடி தொடக்கங்களை அளித்தவர். தொடக்க வீரர்கள் டி20யில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் நிச்சயம் இவரையும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. பிக்பாஷ் லீகில் அதிக சிக்சர்களாக 123 சிக்சர்களை வைத்திருப்பவர். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 150களுக்கு அருகில் உள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

SCROLL FOR NEXT